தல தோனியுடன் ஒப்பிடுவது நல்லது…. ஆனால் எனக்கு இதான் வேணும்: ஸ்பைடர் பண்ட்!

21 January 2021, 3:31 pm
pant - dhoni - updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவது மகிழ்ச்சிதான் என்றாலும் தனக்கென்று ஒரு பெயரை இந்திய அணியில் நிலைநிறுத்திக் கொள்ள ஆசைப்படுவதாக இளம் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்த வீரர்களில் ஒருவராக இருந்தவர் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட். தோனியின் ஓய்வுக்குப் பின் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் பண்ட். இதனாலே இவர் பல முறை தோனியுடன் ஒப்பிடப்பட்டு வருகிறார். இவர் சில சமயங்களில் சொதப்பும் போதும், சிறப்பாகச் செயல்படும் போதும் ஒப்பீடு வந்துவிடுகிறது.

தற்போது தன்னை தோனியுடன் ஒப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தாலும் தனக்கென்று ஒரு பெயரை இந்திய அணியில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பண்ட் கூறுகையில், “தோனி போன்ற ஒரு மிகச்சிறந்த வீரருடன் என்னை ஒப்பிடுவது உண்மையில் மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் அவருடன் என்னை ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. எனக்கென்று இந்திய கிரிக்கெட் அணியில் தனி ஒரு இடத்தைப் பிடிக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால் ஒரு மிகப்பெரிய ஜாம்பவான் உடன் ஒரு இளம் வீரர்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் விளையாடிய விதம் ஒட்டுமொத்த அணிக்கும் மகிழ்ச்சியானதாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

ஆஸ்திரேலியாவில் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி வீரர்கள் தற்போது மும்பை வந்தடைந்தனர். இந்தியா வந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பண்ட் தோனியுடன் ஒப்பிடப்படுவது குறித்துப் பேசினார். முன்னதாக இந்திய அணி அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தவிர இந்திய அணியின் பல முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வெளியேறினார்.

இதனால் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. இருந்தாலும் இந்திய அணியில் இடம் பிடித்த இளம் வீரர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள, இந்திய அணி 2-வது டெஸ்டில் இருந்து எழுச்சி பெற்று அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 எனக் கைப்பற்றி சரித்திரம் படைத்துத் திரும்பியுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகளாக அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த பிரிஸ்பன் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது.

Views: - 0

0

0