‘தல’ தோனி விட்டுச்சென்ற வெற்றிடத்தைப் பூர்த்தி செய்ய ரெடியாகிவிட்டாரா மரண அடி பண்ட்!

5 March 2021, 8:18 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி விட்டுச்சென்ற வெற்றிடத்தைப் பூர்த்தி செய்ய ரிஷப் பண்ட் தயாராகிவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின் மிகப்பெரிய வெற்றிடத்தை இந்திய அணியில் விட்டுச் சென்றார். இந்நிலையில் இவரது இடத்திற்கு இளம் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டு தற்போது விளையாடி வருகிறார். துவக்கத்தில் விமர்சனங்களை எதிர்கொண்ட பண்ட் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், ஒரே ஆளாக நின்று இந்திய அணியை முன்னிலை பெறச் செய்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்திற்குப் பின் துவக்க வீரர் ரோகித் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவரிடம் தோனி ஓய்வுக்குப் பின் அவர் விட்டுச்சென்ற இடத்திற்கு தற்போது பண்ட் தயாராகி விட்டாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ரோகித் சர்மா அவர் இந்திய அணிக்காகத் தேவையான வேலையைச் செய்யத் துவங்கி விட்டார். அதனால் தற்போது அவர் முழுமையாகத் தயாராகி விட்டதாக நினைப்பதாகப் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில், “ரிஷப் பண்ட் அவருக்கு என்று ஒரு தனி பேட்டிங் ஸ்டைல் வைத்துள்ளார். அதே நேரம் அவருக்கு இந்திய அணி நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட தகவலைப் பின்பற்றச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த தகவல்களைக் கேட்டுக் கொள்வதோடு மட்டுமில்லாமல் அவருக்கு என்று உரிய ஸ்டைலில் பேட்டிங் செய்து அதைச் செயல்படுத்தவும் செய்கிறார். இது மிகச்சிறந்த ஒன்றாகும். அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் கச்சிதமாக முடிக்கவும் செய்கிறார். அதுதான் இங்கு மிகவும் முக்கியமான விஷயமாகும்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்சிலும் பார்க்க முடிந்தது. அவரது இன்னிங்சில் முதல் பாதியில் மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது பாதியில் பவுலர்களை அவரது ஸ்டைலில் துவம்சம் செய்யத் துவங்கினார். இதுபோன்ற அச்சமில்லாமல் பவுலர்களை எதிர்கொள்ளும் வீரர்கள் கண்டிப்பாக அணியில் அவசியம். கலவையான அணி இருந்தால் மட்டுமே சிக்கல் இல்லாமல் எதையும் எதிர்கொள்ள முடியும். இதில் தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் நபர் பண்ட்.

அவரது ஆட்டம் குறித்து விமர்சனம் செய்தால் அவரது மனநிலை பாதிக்கப்படும் என்றால் அதை நாம் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. ஆரம்பத்தில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் ஒரு மணி நேர இடைவெளியில் இந்திய அணியை முன்னிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இதுதான் இந்திய அணிக்கும் தற்பொழுது தேவையான ஒன்று. வீரர்களுக்கான சுதந்திரத்தை நாம் அளிக்க வேண்டும்” என்றார்.

Views: - 27

0

0