ரோஹித் சர்மாவை ஆறாவது முறையாக வெளியேற்றிய லியான்!

16 January 2021, 4:54 pm
rohit sharma - updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லியன் இந்தியத் துவக்க வீரர் ரோஹித் சர்மாவை ஆறாவது முறையாக அவுட்டாக்கி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் இந்திய வீரர் ரோகித் சர்மாவை அதிகமுறை அவுட்டாக்கியவீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்து 307 ரன்கள் பின்தங்கியுள்ளது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசி பாதியில் மழை குறுக்கிட்டதால் இரண்டாவது ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா 44 ரன்கள் எடுத்த போது மோசமான ஷாட் அடித்து தனது விக்கெட்டை பரிதாபமாக இழந்து வெளியேறினார். இப்போட்டியில் 74 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் தேவையில்லாமல் லியன் பந்தில் ஷாட் அடிக்க முற்பட்டு தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அந்த தருணத்தில் அந்த ஷாட்டிற்கான அவசியமே இல்லை எனப் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் ரோஹித் பங்கேற்ற 6 முறையும் அவரது விக்கெட்டை லியன் கைப்பற்றியுள்ளார். தற்போது தனது 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று உள்ளார் லியன். முன்னதாக கடந்த 2012 டிசம்பரில் அடிலெய்டில் நடந்த டெஸ்டில் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் ரோகித் சர்மா விக்கெட்டை லியன் கைப்பற்றினார். பின்னர் ஜனவரி 2015 இல் சிட்னியில் நடந்த டெஸ்டில் சர்மாவை போல்ட் ஆக்கினார் லியன். தொடர்ந்து டிசம்பர் 2018 இல் நடந்த டெஸ்டிலும் ரோகித் சர்மாவை இரு இன்னிங்சிலும் அவுட்டாக்கினார் லியன்.

தற்போது ஆறாவது முறையாக ஜனவரி 2021 டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா வெளியேற்றினார் லியன். இதற்கிடையில் ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஷேன் வார்ன் (708 விக்கெட்) மற்றும் கிளன் மெக்ரா (568 விக்கெட்) ஆகியோரை தொடர்ந்து தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் நாதன் லியன்.

டெஸ்ட் அரங்கில் ரோஹித் சர்மா விக்கெட்டை அதிக முறை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் தென்னாபிரிக்காவின் காகிசோ ரபாடா இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் ரோகித் சர்மாவை ஐந்து முறை வெளியேற்றியுள்ளார். இவரைத் தொடர்ந்து மற்றொரு தென்னாப்பிரிக்க வீரரான பிளாண்டர், ரோஹித் சர்மாவை டெஸ்ட் அரங்கில் மூன்று முறை அவுட்டாக்கியுள்ளார்.

Views: - 5

0

0