சச்சின் சாதனையை நிச்சயம் ஜோ ரூட் முறியடிப்பார்: பாய்காட் நம்பிக்கை!

26 January 2021, 2:26 pm
sachin - root - updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சாதனையை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முறியடிப்பார் என முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜோப்ரே பாய்காட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்ற இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்த இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார்.

இவர் பங்கேற்ற 4 இன்னிங்சில் 426 ரன்கள் அடித்து மிரட்டினார். இதில் ஒரு இரட்டை சதம், இரண்டு சதங்களும் அடங்கும். தற்போது இங்கிலாந்து அணி தற்போது இந்தியா வர உள்ளது. இந்திய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்க உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது.

அதேபோல சமீபகாலமாக ஜோ ரூட்டின் செயல்பாடு மிகவும் சிறப்பாகவே உள்ளது. இவர் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் வீரர்கள். அதேபோல இரட்டை சதம் விளாசிய முதல் இங்கிலாந்து கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரூட். இதனால் இவரால் முன்னாள் இந்திய வீரரான சச்சின் சாதனையை முறியடிக்க முடியும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜோப்ரே பாய்காட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாய்காட் கூறுகையில், “
இங்கிலாந்து அணிக்காக டேவிட் கோவர், கெவின் பீட்டர்சன் மற்றும் என்னை விட அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை மறந்துவிடுங்கள். 200 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க தகுதி ஜோ ரூட்டிற்கு உள்ளது. அதேநேரம் சச்சினை விட அதிக ரன்களை அடிக்கவும் அவருக்குத் திறமை உள்ளது. இவருக்கு தற்போது 30 வயது தான் ஆகிறது. அவர் இதுவரை 99 டெஸ்டில் விளையாடி உள்ளார். 8549 ரன்களை ரூட் ஏற்கனவே அடித்துவிட்டார். தற்போது வரை அவருக்கு அதிக நெருக்கடி கொடுக்கும் அளவிற்கான மிகப் பெரிய காயங்கள் எதுவும் இல்லை.

அதனால் இவரால் சச்சினின் சாதனையான 15, 921 ரன்கள் என்ற இலக்கை எளிதாக முறியடிக்க முடியும். அதேநேரம் ஜோ ரூட்டிற்கு போட்டியாளர்களாகக் கருதப்படும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் மிகச் சிறந்த வீரர்கள் தான் அவர்களும் அதிக ரன்களை தற்போது குறித்து வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் திறமையான வீரர்களுக்கு இணையாக திகழும் ஜோ ரூட்டை நாம் கொண்டாட வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ரூட்டிற்கு மிகப் பெரிய சோதனை என்பது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அங்கு வேகப்பந்து வீச்சை சமாளிப்பது மட்டும் தான். ஆனால் தற்போது அவர் விளையாடும் விதம் மிகப்பெரும் அளவில் அவரை மாற்றியுள்ளது.அதனால் இந்த ஸ்டைலிலேயே அவர் செட்டிலாகி இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சாதனைகளைப் படைக்க வேண்டும்” என்றார்.

Views: - 0

0

0