மீண்டும் பவுலர்களுக்கு சாதகமான சேப்பாக்க ஆடுகளம்… மண்ணைக்கவ்விய ஹைதராபாத்: பெங்களூரு இரண்டாவது வெற்றி!

14 April 2021, 11:15 pm
Quick Share

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னையில் நடந்த இன்றைய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல் திரும்பினார்.

மேக்ஸ்வெல் ஆறுதல்
இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கேப்டன் கோலி, படிக்கல் துவக்கம் அளித்தனர். இதில் படிக்கல் (11), கோலி (33) ஓரளவு கைகொடுத்தனர். மேக்ஸ்வெல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சுமார் 5 ஆண்டுக்கு பின் அரைசதத்தை கடந்து கைகொடுக்க, பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் அடித்தது.

வார்னர் அசத்தல்
எட்டக்கூடிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வழக்கம் போல துவக்க வீரர் விர்திமான் சஹா (1) சொதப்பலாக வெளியேறினார். பின் இணைந்த கேப்டன் வார்னர், மணீஷ் பாண்டே ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் கிடைத்த கேப்பில் எல்லாம் பவுண்டரிகளாக விளாசினர்.

ஒரே ஓவரில் 3 விக்கெட்
சீரான இடைவெளியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இந்நிலையில் டேவிட் வார்னர் 37 பந்தில் 54 ரன்கள் அடித்த போது ஜேமிசன் வேகத்தில் அவுட்டானார். இதன் பின் வந்த ஜானி பேர்ஸ்டோவ் (12), மணீஷ் பாண்டே (38), மற்றும் அப்துல் சமாத் (0) ஆகியோரை ஒரே ஓவரில் சபாஷ் அஹமது அடுத்தடுத்து வெளியேற்ற போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது.

ரசித் போராட்டம்
அடுத்து வந்த ஆல் ரவுண்டர்களான விஜய் சங்கர் (3), ஜேசன் ஹோல்டரும் (4) பொறுப்பற்ற முறைவில் தங்களின் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்ப கடைசி நேரத்தில் ரசித் கான் தனிஆளாக போராடினார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்தப் படே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் புவனேஷ்வர் குமார் 1 ரன் எடுத்தார்.

அடுத்த பந்தில் ரசித் கான் 2 ரன்கள் அடித்தார். மூன்றாவது பந்தை ஹர்சல் படேல் நோ பாலாக வீச அதில் ரசித் கான் ஒரு பவுண்டரி விளாசினார். அடுத்த ஃப்ரீ ஹிட் பந்தை ரசித் கான் வீணடித்தார். நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க முயற்சித்த ரசித் கான் ரன் அவுட்டானார். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் மட்டும் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Views: - 28

0

0