செவிலியர்களை கௌரவித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்!

12 May 2021, 5:04 pm
Quick Share

சர்வதேச செவிலியர்கள் தினத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் செவிலியர்களை கௌரவப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸுன் இரண்டாவது அலை படுவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச செவிலியர் தினத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அமைதியாக மனிதாபிமான சேவையை எப்பொழுதும் செய்து வருகிறார்கள். தூக்கமில்லாத இரவுகள், கவனிப்பு, நமக்கு முடியாத நேரத்தில் இங்குமங்குமாக நிற்காமல் பறந்து வேலை செய்வார்கள். இந்த மோசமான சூழ்நிலை முன்பை விட இவர்களின் அருமையை நமக்கு உணர்த்தியுள்ளது. நீங்கள் செய்த அனைத்திற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுடன் சச்சின் மூன்று செவிலியர்களின் புகைப்படத்தையும் அதில் பகிர்ந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி சச்சினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்பு மருத்துவமனையில் இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட சச்சின் ஏப்ரல் 8ஆம் தேதி குணமடைந்து மீண்டும் வீடு திரும்பினார். இதற்கிடையில் சச்சின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் ஒரு கோடி நன்கொடை அளித்துள்ளார். மேலும் பிளாஸ்மா சிகிச்சைக்கான அனைத்து உதவிகளையும் சச்சின் செய்துள்ளார். சர்வதேச அளவில் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் நினைவாக இன்று செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

Views: - 146

0

0