உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சார்துலுக்கு வாய்ப்பு… மஞ்ரேக்கர் கணிப்பு!

13 May 2021, 9:38 pm
Quick Share

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டியில் இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக சார்துல் தாகூர் சேர்க்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டி வரும் ஜூன் 18 ம் தேதி நடக்கிறது. இதில் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் முற்பகுதி என்பதால், இந்திய அணியில் முகமது சிராஜ், இஷாந்த் சர்மா ஆகியோரைவிட சார்துல் தாகூர் பந்தை அதிகம் சுவிங் செய்யும் திறமை உள்ளதால், அவரை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மஞ்ரேக்கர் கூறுகையில், “நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து பயணத்தின் முற்பகுதியில் இந்திய அணி பங்கேற்கும் பொழுது, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமியைத் தொடர்ந்து மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக சார்துல் தாகூரை நான் தேர்வு செய்வேன்.

இதற்கு காரணம் இந்திய அணி நியூசிலாந்து சென்ற போது அங்கு இந்திய அணியில் முழுமையான சுவிங் பவுலர் இல்லை. ஆனால் நியூசிலாந்து அணியில் சுவிங் பவுலர்கள் இடம் பெற்ற காரணத்தினால் நியூசிலாந்து அணி வென்றது. இதே போலத்தான் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் முற்பகுதி என்பதால் அங்கு சூரியன் அவ்வளவாக வெளியே வராது. அதனால் நியூசிலாந்தில் நிலவும் அதே காலநிலைதான் இங்கிலாந்திலும் பெரும்பாலும் காணப்படும். இதனால் அணியில் ஒரு சுவிங் பவுலர் இருப்பது கூடுதல் பலம் சேர்க்கும்” என்றார்.

Views: - 527

0

0