‘இட்ஸ் ஜஸ்ட் ஏ பிகினிங்’… ரிஷப் பண்ட்டை பாராட்டிய பிசிசிஐ தலைவர் கங்குலி!

5 March 2021, 8:55 pm
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் சதம் விளாசிய இந்திய இளம் வீரர் ரிஷப் பண்ட்டை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டியுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்திய இளம் வீரரான ரிஷப் பண்ட் 118 பந்துகளில் 101 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. இவரது சதத்திற்கு முன்பாக இந்திய அணி 146 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறி வந்தது.

ஆனால் இந்திய அணியை மீட்கும் விதமாகப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய அசத்தினார் ரிஷப் பண்ட். இதையடுத்து இவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் போர்டு தலைவரான சவுரவ் கங்குலி, இவரை டிவிட்டர் மூலம் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக கங்குலி வெளியிட்டுள்ள பதிவில், “எவ்வளவு சிறப்பான ஆட்டம். நம்ப முடியவில்லை. நெருக்கடியான நேரத்தில் இப்படி ஒரு சிறப்பான ஆட்டம். இது முதல்முறை அல்ல… அதே போலக் கடைசி முறையும் அல்ல… அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய ஜாம்பவான்கள் பட்டியலிலும் இவர் இடம் பெறுவார். இன்னும் நீண்ட ஆண்டுகள் உள்ளது. இதேபோல ஆக்ரோஷமான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும். அதனால் தான் இந்திய அணியின் மேட்ச் வின்னராகவும் ஸ்பெஷலாகவும் இருக்கிறாய்” என்று அந்த பதவியில் கங்குலி தெரிவித்திருந்தார்.

சில காலத்திற்கு முன்பு இந்தியா விளையாடும் லெவன் அணியில் இருந்து மோசமான பார்ம் காரணமாகத் தனது இடத்தை இழந்தார் பண்ட். தற்போது மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதன் மூலம் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது தனது இடத்தை ஓரளவு நிரந்தர படுத்திக் கொண்ட பண்ட், இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மீண்டும் நுழைய இந்த தளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த போட்டியில் ஆரம்பத்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் பண்ட் சதத்தை நெருங்கும் போது முன்னாள் அதிரடி வீரரான சேவாக்கின் ஆட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக சிக்சர் மூலம் தனது சதத்தை எட்டினார். இது பலராலும் தற்போது பேசப்பட்டும் பாராட்டப்பட்டும் வருகிறது.

Views: - 8

0

0