சவுரவ் கங்குலிக்கு நாளை ஸ்டண்ட் சிகிச்சை… மருத்துவமனை அறிவிப்பு!

27 January 2021, 10:20 pm
Quick Share

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலிக்கு நாளை உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் ஸ்டன்ட் மேற்கொள்ளப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் போர்டு தலைவரான சவுரவ் கங்குலி சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காகச் சிகிச்சை எடுத்துக் கொண்டு கங்குலி பின் வீடு திரும்பினார்.

இதற்கிடையில் தற்போது அவருக்கு ஸ்டன்ட் செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உட்லண்ட்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “இன்று சவுரவ் கங்குலி நெஞ்சுப்பகுதியில் அசௌகரியம் ஏற்பட்டது. இதனால் இவர் உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவருக்கு டாக்டர் தேவி ஷெட்டி மேற்பார்வையில் நாளை ஸ்டண்ட் செய்யப்படவுள்ளது”என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முன்னதாக அப்போலோ மருத்துவமனை கங்குலி தனது இதய ஆரோக்கியம் குறித்து சிகிச்சைக்கு வந்ததாகத் தனியாக மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கடந்த ஜனவரி இரண்டாம் தேதி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஐந்து நாட்கள் சிகிச்சை மேற்கொண்டவர் ஜனவரி 7ஆம் தேதி வீடு திரும்பினார். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய சவுரவ் கங்குலி மருத்துவக் குழுவிற்கு நன்றி தெரிவித்தார்.

இதற்கிடையில் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு ஏற்ப அவருக்கு அடுத்த கட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் முன்னதாகவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது நாளை கங்குலிக்கு ஸ்டன்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்குப்பின் அவருக்கு மேல் சிகிச்சை மேற்கொள்வது குறித்துத் தெரிவிக்கப்படும் என்றும் மருத்துவ குழுவினர் அறிவித்துள்ளனர்.

Views: - 0

0

0