இப்போதைக்கு வேணாம்…! தொடரை தள்ளி வைத்தது தென்னாப்ரிக்கா: அதிர்ச்சியில் பாக்.,

14 February 2020, 7:30 pm
SA - updatenews360
Quick Share

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை தென்னாப்ரிக்கா அணி திடீரென தள்ளி வைத்துள்ளது.

பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பிற நாட்டு அணிகள் தயக்கம் காட்டி வந்தன. இந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்களது சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தியே ஆக வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது.

இதன் முன்னோட்டமாக, வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளை தங்களது சொந்த நாட்டிற்கு அழைத்து கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதற்கு அடுத்ததாக, மார்ச் மாதம் தென்னாப்ரிக்கா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. மேலும், பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை அனுப்பவும் ஏற்பாடு செய்து வந்தது.

இந்த நிலையில், திடீரென பாகிஸ்தான் தொடரை தள்ளி வைப்பதாக தென்னாப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் தென்னாப்ரிக்கா, அடுத்ததாக ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்கிறது. தங்களது அணி கோடை காலத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு தொடர்களில் பங்கேற்று வருவதால், வேலைப்பளு காரணமாக இந்தத் தொடரை தள்ளி வைத்துக் கொள்ளலாம் என தென்னாப்ரிக்கா பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது.

மார்ச் 29-ம் தேதி தொடங்க இருக்கும் ஐ.பி.எல். தொடரில் பெரும்பாலான தென்னாப்ரிக்கா வீரர்கள் கலந்து கொள்ள இருப்பதால், வேலைப்பளுவை காரணம் காட்டி பாகிஸ்தான் தொடரை அந்த அணி தள்ளி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

Leave a Reply