50வது ஆண்டு கொண்டாட்டம்… கவாஸ்கரைக் கௌரவித்த பிசிசிஐ!

6 March 2021, 2:58 pm
Quick Share

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆன தினத்தைக் கொண்டாடும் விதமாக பிசிசிஐ அவரை கௌரவித்தது.

இந்நிலையில் கவாஸ்கரின் மகனான ரோஹன் கவாஸ்கர், சுனில் கவாஸ்கரின் பழைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “மற்றொரு அறிமுகம்!! இந்த முறை இன்ஸ்டாகிராமில்” என அதில் பதிவிட்டுள்ளார். இதற்கிடையில் பிசிசிஐ கவாஸ்கரின் சிறப்பான தருணத்தைக் கௌரவிக்கும் விதமாக அவருக்குச் சிறப்புப் பரிசு ஒன்றை வழங்கியது.

50 ஆண்டுகள்
கடந்த மார்ச் 6, 1971 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயில் நடந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கவாஸ்கர் பல்வேறு சாதனையைத் தகர்த்து கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராக உருவெடுத்தார். கடந்த 1970 – 71 இல் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

அதிக ரன்கள்:
இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்திய கிரிக்கெட் அணிக்கு மறக்க முடியாத தொடர்களில் ஒன்றாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி முதல் டெஸ்ட் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது. அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-0 எனக் கைப்பற்றியது. இந்த தொடரில் கவாஸ்கர் ஒரு இரட்டை சதம் உட்பட நான்கு சதங்கள் அடித்து அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக அமைந்தார்.

தனது கிரிக்கெட் கேரியரில் 125 டெஸ்ட் மற்றும் 108 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார் கவாஸ்கர். கடந்த 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியிலும், 1985 இல் நடந்த உலக கிரிக்கெட் சாம்பியன்ஷில் தொடரை வென்ற இந்திய அணியிலும் கவாஸ்கர் இடம் பெற்றிருந்தார்.

முறியடித்த சச்சின்
கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,122 ரன்கள் விளாசியுள்ளார். கடந்த 2005 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரராகவும் கவாஸ்கர் இருந்தார். ஆனால் சச்சின் 2005 இல் இந்த மைல்கல் சாதனையைத் தகர்த்தார். கவாஸ்கர் 108 ஒருநாள் கிரிகெட்டில் 3092 ரன்கள் விளாசியுள்ளார்.

Views: - 5

0

0