4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி!

Author: kavin kumar
7 October 2021, 12:00 am
Quick Share

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக அபுதாபி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 52-வது லீக் ஆட்டம் அபுதாபியில் உள்ள சேக் சாயீத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் அபிஷேக் ஷர்மா 13 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறிய நிலையில், அடுத்து வந்த கேன் வில்லியம்சனுடன் ஜேசன் ராய் ஜோடி சேர்ந்தார். சற்று நிதானமாக நிலைத்து நின்று ஆடிய இருவரும், சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினர். ஆனால் 12-வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. ஹர்ஷல் பட்டேல் வீசிய பந்தில் கேன் வில்லியம்சன 31 ரன்களில் (4 பவுண்டரிகள்) போல்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த பிரியம் கர்க் 15 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அரை சதத்தை நோக்கி முன்னேறிய ஜேசன் ராய் 44 ரன்களில் (5 பவுண்டரிகள்) 15-வது ஓவரில் டேனியல் கிறிஸ்டியன் பந்துவீச்சில் அவுட் ஆனார்.இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ்டியன் டேனியல் ஒரு ரன்னிலும், ஸ்ரீகர் பரத் 12 ரன்னிலும் வெளியேறினர்.

இதனால் பெங்களூரு அணி 38 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் மெக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பெங்களூரு அணி வெற்றியை நோக்கி சென்றது.15-வது ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல ரன்அவுட் ஆனார். அவர் 25 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் விளாசினார். அவர் ஆட்டமிழக்கும்போது பெங்களூரு 14.1 ஓவரில் 92 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 35 பந்தில் 49 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். பெங்களூரு அணிக்கு கடைசி நான்கு ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்தார். அவர் 52 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். அப்போது பெங்களூரு அணிக்கு 19 பந்தில் 33 ரன்கள் தேவைப்பட்டது. 20 ஓவர் முடிவில் பெங்களூரு 137 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

Views: - 559

0

0