‘தல’தோனி கொடுத்த தங்கமான அட்வைஸ்… நடராஜன் ரொம்ப ஹேப்பி பாஸ்!

7 April 2021, 12:00 pm
Quick Share

இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி கொடுத்த அறிவுரை தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர்களில் ஒருவராகத் திகழ்பவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். இவர் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமான முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிகபட்சமாக 71 யார்க்கர்கள் வீசிய ஒரே பவுலர் நடராஜன். இந்த அசத்தலான யார்க்கர்கள் மூலம் சர்வதேச அரங்கில் மிகப்பெரிய பேட்ஸ்மேன்களாக திகழ்ந்த தோனி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் உள்ளிட்டவர்களை நடராஜன் வெளியேற்றினார். இதற்கு தோனி கொடுத்த அட்வைஸ் தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் நடராஜன் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நடராஜன் கூறுகையில், “ தோனி போன்ற ஒருவரிடம் பேசும் வாய்ப்பு கிடைப்பதே என்னைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய விஷயமாகும். அவர் என்னிடம் உடற்தகுதி குறித்துப் பேசியதோடு என்னை உற்சாகப்படுத்தினார். அதேநேரம் இன்னும் எனக்கு அனுபவம் கிடைக்கக் கிடைக்க மிகச்சிறந்த வீரராக மாறுவேன் என்றும் தெரிவித்தார். அதே நேரம் அவர் வேகம் குறைவான பவுண்சர்கள் மற்றும் மெதுவான கட்டர் பந்துகள் உள்ளிட்ட வேறுபாடான பந்துவீச்சைக் கையாளும் படி அறிவுறுத்தினார்.

அது எனக்கு அதிகளவில் கைகொடுத்தது.
கடந்த ஆண்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற போது நான் ஒரு பந்தை அவரது விக்கெட்டை வீழ்த்த குறிவைத்து வீசினேன். ஆனால் அந்த பந்தை தோனி இமாலய சிக்சராக 102 மீட்டருக்கு அனுப்பினார். அடுத்த பந்தில் அவரை அவுட்டாக்கினேன். ஆனால் அதை நான் கொண்டாடவில்லை. போட்டி முடிந்து மீண்டும் அறைக்குத் திரும்பிய பிறகு அவருடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

எனக்குக் குழந்தை பிறந்த அதே தேதியில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய விக்கெட்டாக கருதப்படும் டிவிலியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தினேன். அதுவும் குறிப்பாக நாக் அவுட் போட்டிகளில் அவரின் விக்கெட்டை கைப்பற்றியதில் ரொம்ப சந்தோஷம். ஆனால் இந்த மகிழ்ச்சியைத் தான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். எனது குழந்தை பிறந்ததே யாரிடமும் தெரிவிக்கவில்லை. போட்டியில் வெற்றி பெற்ற பின் தான் இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனத் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அதற்குள் கேப்டன் டேவிட் வார்னர் இதைப் போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு நிகழ்ச்சியில் தெரிவித்து விட்டார்” என்றார்.

Views: - 3

0

0