தலையெழுத்தை மாற்றிய நடராஜன்… கதிகலங்க வைத்த சாம் கரன் : போராடி வீழ்ந்த இங்கிலாந்து!

Author: Udhayakumar Raman
28 March 2021, 10:25 pm
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று புனேவில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 48.2 ஓவரில் 329 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இரட்டை அடி
கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (14), ஜானி பேர்ஸ்டோவ் (1) ஆகியோரை அடுத்தடுத்து அவுட்டாக்கினார் புவனேஷ்வர் குமார். தொடர்ந்து வந்த பென் ஸ்டோக்ஸ் (35) நடராஜன் வேகத்தில் வெளியேறினார். தாவித் மலான் (50) அரைசதம் அடித்து அவுட்டானார். கேப்டன் ஜாஸ் பட்லர் (15) நிலைக்கவில்லை. அடுத்து வந்த லிவிங்ஸ்டன் (36), மொயின் அலி (29) ஓரளவு கைகொடுத்தனர்.

மிரட்டிய சாம் கரன்
இதன் பின் இணைந்த சாம் கரன், அடில் ரசித் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ஒருபுறம் சாம் கரண் பவுண்டரிகளாக விளாச, மறுமுனையில் இவருக்கு ஏற்றபடி ரசித் சிங்கள் எடுத்து நல்ல கம்பெனி கொடுத்து வந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணியின் ரன் வேகம் சீராக அதிகரித்தது.

ஐந்து பவுண்டரிகள், 2 சிக்சர்கள் பறக்கவிட்ட சாம் கரன் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் ரசித் 19 ரன்கள் அடித்த போது இந்திய கேப்டன் விராட் கோலியின் சூப்பர் கேட்ச் மூலம் வெளியேறினார். இதற்கு பின் சாம் கரன் இங்கிலாந்து அணிக்காக தனி ஆளாக போராடினார்.

திக் திக் திக்
மார்க் வுட் துணையுடன் முடிந்த அளவு பவுண்டரிகள் அடிக்கும் முடிவுக்கு திரும்பினார் சாம் கரன், இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 5 ஓவரில் 48 ரன்கள் என்ற நிலையில் இருந்து 3 ஓவரில் 23 ரன்கள் என்ற நிலையை எட்டியது. புவனேஷ்வர் குமார் வீசிய போட்டியின் 48வது ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுக்க, இரண்டு ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற19 ரன்கள் தேவைப்பட்டது.

49வது ஓவரை ஹர்திக் பாண்டியா சிறப்பாக வீச, கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 50 வது ஓவரில் நடராஜன் வெறும் 6 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுக்க, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 322 ரன்கள் மட்டும் அடித்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்திய அணிக்கு எதிராக எட்டாவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார் சாம் கரன். இதற்கு முன்னதாக முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர்
லான்ஸ் குலுசுனர் 75 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.

Views: - 261

3

0