சின்ன ‘தல’சுரேஷ் ரெய்னா ‘பேக்’… இந்த முறை பழைய பலமுடன் கெத்து காட்டும் சிஎஸ்கே!

1 March 2021, 9:05 pm
Quick Share

இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் மார்ச் 11ஆம் தேதி முதல் துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ தனது தூக்கத்தை இழந்து வருகிறது எனலாம். சமீப காலமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால் ஆறு குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சிகளை வரும் மார்ச் 11ஆம் தேதி முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த பயிற்சியில் முதல் நாளிலிருந்து கேப்டன் தோனி பங்கேற்பார் என்று தெரிகிறது. இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு பேட்ஜ்களாக பயிற்சியைத் துவங்க இருப்பது உண்மைதான். இதன் முதல் நாளிலிருந்தே கேப்டன் தோனி பங்கேற்க உள்ளார். இதனால் வீரர்களுக்குப் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. இந்த பயிற்சி முகாம் விரைவில் வெற்றிகரமாகத் துவங்கும் என எதிர்பார்க்கின்றோம்.

அதேபோல பாதுகாப்பு முறையைக் கண்டிப்பாகப் பின்பற்றுவோம். வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு இந்த முகாமில் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அதேபோல இதில் பங்கேற்கும் அனைவருக்கும் கட்டாயமாகப் பரிசோதனையும் நடத்தப்படும். கடந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக எங்களுக்கு அமைந்தது. அதிலிருந்து தற்போது நிறையப் பாடங்கள் கற்றுக் கொண்டுள்ளோம். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு எதுவும் மோசமாக நடந்து விடக்கூடாது என்பதையே பிரார்த்திக்கிறோம். கூடுதலாகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய எந்த அவசியமும் தற்போது கிடையாது. சரியாகத் திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தைச் சரியான முறையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவின் வருகை மீண்டும் அந்த அணிக்கு பலத்தைக் கூட்டி உள்ளது எனலாம்.இதற்கிடையில் இந்த ஆண்டு சென்னை அணி பலமான லெவன் அணி கொண்டு களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்க்கப்படும் லெவன் அணியின் பட்டியல்: ராபின் உத்தப்பா, ஃபாப் டுபிளசி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, தோனி (கே), சாம் கரன், ரவிந்திர ஜடேஜா, கிருஷ்ணப்பா கௌதம், மொயின் அலி, லுங்கி நிகிதி, தீபக் சகார்.

Views: - 6

1

0