பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் ஓடி வந்த ரசிகர்… தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பிய கோலி!

25 February 2021, 2:51 pm
Fan On Ground - Updatenews360
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் போது கேப்டன் கோலியைக் காண ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அரைசதம் விளாசி அசத்த முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து 13 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் போது கேப்டன் கோலியைக் காண ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த ரசிகரைப் பார்த்த கோலி உடனடியாக பின் நோக்கிச் சென்று அவரை தூரத்திலேயே நிறுத்தித் திருப்பி அனுப்பிவைத்தார். இந்த சம்பவத்தைப் பார்த்த ரசிகர்கள் கோஷமிட்டனர்.

பயோ பபுள் முறை தற்போது அமலில் உள்ளதால், வீரர்களுக்குக் கடுமையான விதிமுறைகள் உள்ளது. இவர்களுக்கு இடையே ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொள்வது மற்றும் போட்டி அதிகாரிகள் சந்திப்பதற்குக் கூட கடும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த போட்டியைக் காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு முதல் நாள் ஆட்டத்தை சுமார் 55,000 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

ஆனால் இவ்வளவு பாதுகாப்புகளையும் மீறி ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து போட்டியின் நடுவே ஓடிவந்த சம்பவம் பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இதுதொடர்பாக குஜராத் கிரிக்கெட் கூட்டமைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த சம்பவம் குறித்த விரைவில் விசாரணை நடத்தப்படும். மேலும் மைதானத்திற்குள் ஓடி வந்த ரசிகர் யார் என்பதையும் விரைவில் கண்டுபிடிப்போம். அனைவரின் பாதுகாப்பு தான் மிக முக்கியமான ஒன்று. அதனால் அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.

Views: - 14

0

0