10 மாதங்களாக இலங்கையில் காத்திருக்கும் ஒரே ஒரு இங்கிலாந்து ரசிகர்: அவருக்கு இப்படி ஒரு சிக்கலா!

12 January 2021, 10:00 pm
Quick Share

இங்கிலாந்து இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரைக் காண சுமார் 10 மாதங்களாகக் காத்திருந்த ஒரு இங்கிலாந்து ரசிகருக்கு அந்த தொடரை பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் நாளை மறுநாள் காலேவில் துவங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியைக் காண இங்கிலாந்து ரசிகர் ஒருவர் சுமார் 10 மாதங்களுக்கு மேலாக இலங்கையில் காத்திருக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி அப்போது கொரோனா வைரஸ் காரணமாக, இலங்கையை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. அந்த தொடரைப் பார்க்க இங்கிலாந்தில் இருந்து பர்மி ஆர்மியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் இலங்கை வந்துள்ளார். ஆனால் தொடர் நடக்காமல் இங்கிலாந்து அணி தாயகம் திரும்பியதால் அவரால் அப்போது தொடரைப் பார்க்க முடியாமல் போனது.

அதன் பிறகு வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக இங்கிலாந்து ரசிகரான லீவிஸ் இலங்கையில் தங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின் இலங்கைக்கு மீண்டும் இங்கிலாந்து அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த போட்டி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் நடத்த இலங்கை கிரிக்கெட் முடிவு செய்துள்ளது. இதனால் இந்த போட்டியை லீவிஸால் காண முடியாத நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஆண்டி கேடிக் மீது கொண்ட அன்பு காரணமாகத் தன்னை ரேண்டி கேடின் என அழைத்துக் கொள்ளும் இந்த நபர் கொழும்பில் உள்ள பாரில் இந்த இடைப்பட்ட காலத்தில் பணிபுரிந்துள்ளார். இதுகுறித்து லீவிஸ் கூறுகையில், “இலங்கையில் இங்கிலாந்து தொடரைப் பார்க்காமல் போகக் கூடாது என்ற நம்பிக்கையில் இத்தனை மாதங்களாக இருந்தேன். ஆனால் வைரஸ் பரவல் காரணமாக மைதானத்துக்குள் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும் இந்த போட்டியை நான் முழுமையாகப் பார்க்காமல் இருக்கப் போவது கிடையாது. போட்டி காலேவில் நடப்பதால் எனது அதிர்ஷ்டமாக 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை ஒன்று அங்கு உள்ளது.

அதன் மேல் இருந்து இந்த போட்டியை என்னால் பார்த்து ரசிக்க முடியும். அந்த கோட்டையின் மேல் அமர்ந்து என்னால் முடிந்த அளவுக்கு ரசிகர்களைத் திரட்டி இங்கிலாந்து அணி வீரர்களை உற்சாகப்படுத்த உள்ளேன். இங்கு இருந்துகொண்டே எனது வேலை இன்டர்நெட் உதவியுடன் இதுவரை செய்து வந்தேன். ஆனால் தற்போது தாயகம் திரும்ப வேண்டும் என நினைக்கிறேன். இங்கு வாழ்வதற்குக் குறைந்த பணம் செலவாகும் என்பதால் இங்கே தங்க முடிவெடுத்துவிட்டேன். சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வராத காரணத்தினால் இந்த அனைத்தும் குறைந்த செலவில் கிடைக்கிறது.

மீண்டும் இத்தனை நாட்கள் இடைவெளிக்குப் பின் இங்கு இங்கிலாந்து அணி வருவதைக் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட நாட்களுக்குப்பின் உற்சாகம் அடைந்துள்ளேன். ஆனால் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் காணமுடியாதது வருத்தம் அளிக்கிறது” என்றார்.

Views: - 11

0

0