டோக்கியோ ஒலிம்பிக்: 121 நாள் பயணத்தை துவங்கிய ஒலிம்பிக் தீபம்!!

Author: Udhayakumar Raman
25 March 2021, 12:52 pm
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் தீபம் தனது 121 நாள் பயணத்தை இன்று துவங்கியது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோவில் நடக்கவிருந்த சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்டு 8ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.

இதையொட்டி ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் புகுஷிமாவில் இன்று தொடங்குகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த நோரியோ சசாகி முதல் நபராக தீபத்தை ஏந்தி செல்கிறார்.

முதல் நாளில் 15 பேர் ஒலிம்பிக் தீபத்துடன் பயணத்தை துவங்குகின்றனர். ஜப்பான் முழுவதும் 47 இடங்களுக்கு மொத்தம் 121 நாட்கள் இந்த தீபம் பயணிக்கிறது. இதை சுமார் 10,000 பேர் தொடர் ஓட்டமாக எடுத்து செல்கின்றனர். வழக்கமாக ஒலிம்பிக் தீபம் ரசிகர்களின் உற்சாகத்துக்கு மத்தியில் தனது பயணத்தை துவங்கும். ஆனால் தற்போதும் கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால் குறைந்த எண்ணிக்கையில் ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர். சமூக இடைவெளி, கட்டாயம் முககவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு மாத பயணத்தில் போது அச்சுறுத்தல் அதிகரிக்கும் பட்சத்தில் ஒலிம்பிக் தீபத்தின் பயணம் நிறுத்த அல்லது மாற்றுப்பாதையில் செல்ல தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒலிம்பிக் தீபக் தனது பயணத்தை தற்போது நாராஹா நகரில் துவங்கியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சாலையில் இரு புறங்களில் சமூக இடைவெளியுடன் நின்று உற்சாகப்படுத்தினர்.

இது குறித்து ஒலிம்பிக் நிர்வாக கமிட்டி தலைமை அதிகாரி செய்கோ ஹசிமோடோ கூறுகையில், “டோக்கியோ 2020 ஒலிம்பிக் தீபம் ஜப்பான் குடிமக்களுக்கும் உலகின் உள்ள அனைத்து நாட்டின் குடிமக்களுக்கும் நம்பிக்கையின் பிரகாசமான ஒளியாக அமையட்டும்” என்றார்.

Views: - 75

0

0