முத்தரப்பு டி20 தொடரில் ஆஸி., அணி சாம்பியன் : தோத்தாலும் மந்தனா… மந்தனாதாயா…!

12 February 2020, 12:46 pm
smiriti mandhana - updatenews360
Quick Share

மெல்போர்ன் : முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து, ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்ட முத்தரப்பு கிரிக்கெட் தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. பல்வேறு போட்டிகளுக்கு பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

மெல்போர்னில் இன்று நடைபெற்ற இறுதி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. மூனேவின் (71 ரன்கள் நாட் அவுட்) சிறப்பான ஆட்டத்தால், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது. மூனேவைத் தொடர்ந்து, கார்டுனர், லேனிங் ஆகியோர் தலா 26 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா, கெயிக்வாட் ஆகியோர் தலா இரு விக்கெட்டையும், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. இருப்பினும், தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா அபாரமாக ஆடினார். இதனால், இந்திய அணி வெற்றி பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 66 ரன்கள் குவித்த போது மந்தனா விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

இதைத் தொடர்ந்து வீராங்கனைகளும் பெரிதளவில் சோபிக்காததால், இந்திய அணி 144 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜெஸ் ஜோனாசென் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது.