சதம் இல்லாததால் விரக்தியா… விராட் கோலி அளித்த விளக்கம்!

3 March 2021, 9:39 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக தனது நீண்ட நாட்கள் சதம் இல்லாத ஏக்கம் விரக்தியை ஏற்படுத்தியதா என்பதற்குக் கோலி விளக்கம் அளித்துள்ளார்.  


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது. 


இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சதம் எதுவும் அடிக்கவில்லை. இது பரவலாகப் பேசும் பொருளாகவே மாறியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ரன்மெஷினாக பார்க்கப்படும் விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெடுக்கு அறிமுகமான பின் முதல் முறையாகக் கடந்தாண்டு ஒரு சதம் கூட அடிக்க முடியாத ஆண்டாகக் கோலிக்கு அமைந்தது.  
இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி இதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், “சதம் அடிக்காதது எனக்கு விரக்தியை ஏற்படுத்தவில்லை. ஏன் என்றால் ஒரு பேட்ஸ்மேனாக நான் எங்கு நிற்கிறேன் என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். அணியில் எனது பொறுப்பு என்ன என்பது எனக்குத் தெரியும். 

ஒவ்வொரு முறையும் மைல்கற்கள் பற்றிப் பார்க்கின்றனர். அதே நேரம் அணி சிறப்பாகச் செயல்படாத போது கேப்டன் பொறுப்புக்குள் நுழைகின்றனர். அணி சிறப்பாகச் செயல்படும் போது தனிநபர் குறித்த ஸ்கோர்களை ஆராய்ச்சி செய்கின்றனர். அதனால் என்னைப் பொறுத்தவரையில், அவர்கள் ஒவ்வொரு குறைகளாகத் தாவிக்கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு முன்னேற்றத்திலும் ஒரு மைல்கல் நடந்தால் சிறப்பானது. நடக்கவில்லை என்றால் அணி வெற்றி பெற வேண்டும். இறுதியாக இதுவே எங்களின் பிரதான இலக்கு” என்றார். 

Views: - 13

0

0