‘டான்’ ரோஹித்திடம் இருந்து இந்த விஷயத்தைக் கோலி கற்றுக்கொள்ள வேண்டும்: மனோஜ் திவாரி அட்வைஸ்!

5 March 2021, 9:17 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மாவிடம் இருந்து ஆஃப் சைடில் செல்லும் பந்தை எப்படி விட வேண்டும் என கேப்டன் கோலி கற்றுக்கொள்ள வேண்டும் என மனோஜ் திவாரி அறிவுரை அளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சரில் டக் அவுட் ஆனார். இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இரண்டாவது முறையாக ரன் எதுவும் எடுக்காமல் விராட் கோலி இரண்டாவது முறையாக வெளியேறினார். மேலும் இந்த தொடர் முழுவதுமே விராட் கோலியின் ரன் சேகரிப்பு பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும் விதமாக அமையவில்லை.

இந்த தொடர் முழுதும் விராட் கோலி 11, 72, 0, 62, 27 மற்றும் 0 என ஆறு இன்னிங்சிலும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதற்கிடையில் விராட் கோலியின் தற்போதைய சமீபகாலமாக மிகப் பெரிய கேள்வியையும், மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கடந்த ஒரு ஆண்டாகவே கோலி சிறப்பான துவக்கத்தைச் சதமாக மாற்றத் திணறி வருகிறார் எனலாம். இதற்கிடையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரு அணிகளுமே திணறும் பேட்டிங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்காத ஆடுகளத்தில் இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை இல்லை என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மனோஜ் திவாரி கூறுகையில், “இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் நடக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் முதல் இரண்டு நாள் ஆட்டங்கள் எடுத்துக் கொள்ளும்போது அந்த ஆடுகளத்தில் பந்து எக்குத்தப்பாகச் சுழன்றது. இதனால் இந்த தொடரில் ஏற்பட்டுள்ள குறைந்த ரன் சேகரிப்பு என்பது மிகவும் கடினமான பேட்டிங் தன்மையில் நடப்பதை உணர்த்துகிறது. இதுபோன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் 50 ரன்களை கடந்த பின்பும் கூட செட்டாக உணரவில்லை.

குறிப்பாக விராட் கோலி ஆஃப் சைடில் செல்லும் பந்தை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதை ரோஹித் சர்மா இந்த போட்டியில் சிறப்பாகவே செயல்படுத்தினார். விக்கெட் வீழ்த்தும் சிறந்த பந்துகளை தவிர்ப்பது எப்படி என்பதை அவர் அனைவருக்கும் வெளிப்படையாக உணர்த்தினார். இதை அவரிடம் இருந்து கண்டிப்பாகக் கோலி கற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஆனால் பேட்டிங் செய்யும் பொழுது களத்தில் இதில் சற்று தடுமாறினார் கோலி என்று தான் சொல்ல வேண்டும்” என்றார்.

Views: - 52

1

0