வான்கடே டெஸ்ட் … 62 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து : அஸ்வின், சிராஜ் அசத்தல்… 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா..!!!

Author: Babu Lakshmanan
4 December 2021, 4:14 pm
siraj test - updatenews360
Quick Share

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி வெறும் 62 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் வான்கடே மைதானத்தில் நேற்று மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியது. இதில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்தது. மயாங்க் அகர்வால் 120 ரன்களுடனும், சஹா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 4 விக்கெட்டுக்களையும் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜஸ் படேல் கைப்பற்றினார்.

இந்த நிலையில், இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கிய பிறகு, சஹா (27), மயாங்க் அகர்வால் (150), அஸ்வின் (0), அக்ஷர் படேல் (52), ஜெயந்த் யாதவ் (12), சிராஜ் (4) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுக்களையும் அஜஸ் படேல் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய 3வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக, இந்த சாதனையை, இங்கிலாந்து முன்னாள் வீரர் லேக்கர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே படைத்திருந்தனர். அதேவேளையில், ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

நியூசிலாந்து வீரரின் இந்த சாதனையை அந்த நாட்டு ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்கு, அந்த அணியின் பேட்ஸ்மென்கள் அதிர்ச்சி கொடுத்தனர். இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், வெறும் 62 ரன்னுக்கு நியூசிலாந்து அணி ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜேமிசன் 17 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும், அக்ஷர் படேல் 2 விக்கெட்டுகளும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் 263 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

Views: - 1204

0

0