சதத்தை எட்டமுடியாத வாஷிங்டன் சுந்தர்: இந்திய அணி 365 ரன்களுக்கு ஆல் அவுட்!

6 March 2021, 11:21 am
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 96 ரன்கள் அடித்து அசத்த இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

இதில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு சுருண்டது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து 89 ரன்கள் முன்னிலை பெற்றது. வாஷிங்டன் சுந்தர் (60), அக்‌ஷர் படேல் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

சுந்தர் ஏமாற்றம்
இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே சுந்தர் , படேல் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தனர். இதனால் இந்திய அணியின் ரன்வேகம் மலமலவென் உயர்ந்தது. வாஷிங்டன் சுந்தர் ஒரு புறம் பவுண்டரிகளாக விளாச மறுபுறம் அக்‌ஷர் படேல் தன் பங்கிற்கு சிக்சர்களாக பறக்கவிட்டார்.

திருப்புமுனை
இந்நிலையில் 43 ரன்கள் எடுத்த நிலையில் அக்‌ஷர் ரன் அவுட்டாக போட்டியில் திருப்பம் ஏற்பட்டது. எதிர்முனையில் 96 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் இருந்த நிலையில் அடுத்து வந்த இஷாந்த் சர்மா, சிராஜ் ஆகியோரை ஒரே ஓவரில் ஸ்டோக்ஸ் வெளியேற்றினார். இதனால் வாஷிங்டன் சுந்தரால் சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 160 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

Views: - 9

0

0