இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் போட்டிகள் மும்பைக்கு மாற்றமா?

28 February 2021, 7:48 pm
Ind -Eng - Updatenews360
Quick Share

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டிகள் புனேவில் இருந்து மும்பைக்கு மாற்றப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்குப் பின் இங்கிலாந்து அணி 5 டி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் ஒருநாள் போட்டிகள் அனைத்தும் புனேவில் நடக்கவுள்ளன. டி-20 போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் நடக்கவுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

இதனால் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக்கத் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் தற்போது இந்த ஒருநாள் தொடரின் கடைசி போட்டியை மும்பையில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ரசிகர்களுக்கு இந்த தொடரைக் காண அனுமதி கிடையாது.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போதைய கொரோனா வைரஸ் சூழலில் ரசிகர்கள் மைதானத்திற்கு வருவது குறித்த கவலை இல்லை. ஆனால் அனைத்து போட்டிகளும் புனேவிலே நடத்தப்படுமா அல்லது கடைசி போட்டி மட்டும் மும்பையில் நடத்தப்படுமா என்ற இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த முடிவில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் விருப்பமும் உள்ளது” என்றார்.

வரும் மார்ச் 23, 26 மற்றும் 28 தேதிகளில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்கிடையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி அல்லது டிரா செய்தாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதிபெறும்.

Views: - 208

1

0