என்ன சொல்ல எனக்கு வார்த்தைகள் எதுவும் வரல… மகிழ்ச்சியில் முகமது சிராஜ்!!

5 April 2021, 10:16 pm
Quick Share

தனக்குக் கிடைத்த பரிசைப்பார்த்து மகிழ்ச்சியில் வார்த்தை எதுவும் வரவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான டி நடராஜன் மற்றும் சார்துல் தாகூர், முகமது சிராஜ் ஆகியோர் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் தைக்கூன் ஆனந்த் மகேந்திரா நிறுவனத்திடம் இருந்து புத்தம் புதிய மகேர்ந்திரா தார் ஜீப் கிடைத்ததை மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தினால் ஆறு இளம் இந்திய வீரர்களுக்கு மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தார் ஜீப் பரிசளிப்பதாக உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை தற்போது அவர் நிறைவேற்றியுள்ளார். இந்த பட்டியலில் சார்துல், நடராஜன், சிராஜ் தவிர்த்து மகேந்திரா நிறுவனம் வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சாய்னி, சுப்மான் கில் உள்ளிட்டோருக்கும் அந்த நிறுவனம் ஜீப் வழங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என வெல்ல இந்த இளம் வீரர்கள் மிக முக்கியமான காரணமாகத் திகழ்ந்தனர்.

இதுதொடர்பாக சிராஜ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “வார்த்தைகள் எதுவும் தற்போது வரவில்லை. இந்த மகேந்திரா தார் ஜீப் பரிசைப்பார்த்து மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. தற்போது இந்த தருணத்தில் ஆனந்த் மகேந்திரா சாருக்கு எனது மிகப்பெரிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் சிராஜ், மொத்தமாக 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பினார். முதல் டெஸ்டில் பங்கேற்காமலும், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் போன்ற சீனியர் பவுலர்கள் இல்லாத நிலையிலும் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் சிராஜ். குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத கோட்டை எனக் கருதப்பட்ட காபா மைதானத்தில் நடந்த டெஸ்டில் சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தினார்.

Views: - 1

0

0