பரபரப்பான சாலையில் ஓடிய காரில் திடீர் தீ : செல்லப்பிராணியுடன் உயிர் தப்பிய கார் உரிமையாளர்… கடும் போக்குவரத்து நெரிசல்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2022, 9:17 pm
Car Fire - Updatenews360
Quick Share

கரூர் பேருந்து நிலையம் அருகில் ஓடும் காரில் தீ ஏற்பட்ட நிலையில் பேட்டரியில் பரவிய தீயால் என்ஜின் பகுதி எரிந்து சேதமடைந்தது.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சார்ந்தவர் மணி. இவர் ஒசூர் செல்வதால் தனது செல்லப் பிராணியான நாயை தாந்தோன்றிமலையில் உள்ள தனது உறவினர் வீட்டில் விடுவதற்காக வேலாயுதம்பாளையத்திலிருந்து கரூர் பேருந்து நிலையம் வழியாக தாந்தோன்றிமலை செல்வதற்காக வந்துள்ளார்.

கார் பேருந்து நிலையம் அருகில் வந்த போது காரின் முன் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. இதனை கண்ட மணி, காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு அவசரம், அவசரமாக அவரது நாயையும் இறக்கி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டார்.
அதற்குள் தீ மளமளவென பரவி என்ஜின் பகுதியில் கொழுந்து விட்டு எரிந்தது. அதனை பார்த்த கடைக்காரர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை அடித்து நெருப்பை அணைத்தனர்.

இதனால் மாலை நேரத்தில் பரப்பாக காணப்படும் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக கரூர் மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை சுற்றி இருந்து வேடிக்கை பார்த்த பொதுமக்கள் தங்களுடைய செல்போனில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

Views: - 598

0

0