வார்டனை தாக்கிவிட்டு 12 சிறுவர்கள் எஸ்கேப்: ஆய்வு நடத்திய மறுநாளே அரசு கூர்நோக்கு இல்லத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2023, 10:16 am
Govt Perspective Home - Updatenews360
Quick Share

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை எம் ஜி ஆர் பேருந்து நிலையத்திற்கு அருகே சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்படுகிறது.

இங்கு திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 18 வயதிற்கு கீழ் குற்ற செயல்களில் ஈடுபட்ட 20 சிறார்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலையில் இரவு வேளைக்கான உணவை வாங்கிக் கொண்ட சிறுவர்களில் 12 பேர் திடீரென கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வார்டனை தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.


உடனடியாக நடந்த சம்பவம் தொடர்பாக கூர்நோக்கு இல்லத்தில் உள்ள வார்டன் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் ராஜேந்திரன், நெல்லை மாநகர கிழக்கு காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் நெல்லை எம் ஜி ஆர் பேருந்து நிலையம், பாளையங்கோட்டை ரயில் நிலையம், சந்திப்பு ரயில் நிலையம், மார்க்கெட் என மக்கள் கூடும் பகுதிகளில் இந்த சிறுவர்கள் தப்பி ஓடி உள்ளார்களா என தேடும் பணியில் நெல்லை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த், அரசினர் கூர்நோக்கு இல்லத்தை ஆய்வு செய்து இங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும், கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் மாநகர காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கூர்நோக்கு இல்லத்தில் உள்ள கண்காணிப்பாளர் ஜெய்சங்கர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி உள்பட அதிகாரிகள், கூர்நோக்கு இல்லத்தின் வாசலில் இருந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் மாநகர முக்கிய சந்திப்புகளில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 328

0

0