தமிழகம் முழுவதும் 12வது மெகா தடுப்பூசி முகாம்: 2வது டோஸ் பயனர்களுக்கு முன்னுரிமை..!!..!!

Author: Aarthi Sivakumar
28 November 2021, 10:37 am
Quick Share

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 12வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 2வது டோஸ் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மெகா தடுப்பூசி முகாம் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவு பெற்றுள்ளன.

இந்தநிலையில் 12வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது. முதல் டோஸ் செலுத்திக்கொண்டு, காலக்கெடு முடிந்தும் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளித்து 12வது மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்படுகிறது.

இதுவரை 77.02 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 41.60 சதவீதம் பேருக்கு 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 2 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், 9 லட்சத்து 60 ஆயிரத்து 465 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Views: - 170

0

0