பொதுமக்கள் குப்பை கொட்டாமல் இருக்க 24X7 காவல் காக்கும் தூய்மை பணியாளர்.. கோவை மாநகராட்சியில் அவலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2023, 2:25 pm
Security for Garbage - Updatenews360
Quick Share

பொதுமக்கள் குப்பை கொட்டாமல் இருக்க 24X7 காவல் காக்கும் தூய்மை பணியாளர்.. கோவை மாநகராட்சியில் அவலம்!!

கோவை மாநகராட்சி உட்பட்ட 28 வது வார்டில் இபி காலனி, வி ஜி ராவ் நகர், ஆவாரம்பாளையம், இளங்கோ நகர், ஷோபா நகர், அம்பாள் நகர், சரஸ்வதி கார்டன் ஜெம் நிர்மாலயம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது.

இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் துப்புரவு பணியாளர்கள் தள்ளு வண்டியின் மூலம் சென்று குப்பைகளை எடுத்து வருகின்றனர்.

ஒரு சில பகுதிகளுக்கு அவ்வாறு செல்ல போதுமான ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் சாலையின் ஓரமாக உள்ள குப்பை தொட்டிகளில் தங்களது குப்பைகளை கொட்டி விட்டு செல்வது வழக்கம்.


இந்த 28 வது வார்டுக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பாரதி நகர் சாலையில் சரஸ்வதி கார்டனுக்கு செல்லும் வழியில் இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த சாலை சக்தி ரோடு பகுதியிலிருந்து கோவை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் செல்வதற்கு ஒரு இணைப்பு சாலையாக இருந்து வருகிறது .

இதன் காரணமாக இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டியில் பொதுமக்கள் போடும் குப்பைகள் விரைவில் நிறைந்து விடுவதால் பலர் குப்பைகளை குப்பைத் தொட்டியின் அருகிலேயே வீசிவிட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

அப்படி சேரும் குப்பைகள் ஒரு சில நாட்கள் மாநகராட்சி லாரியின் மூலம் வந்து அகற்றிச் செல்வது வழக்கம். சில நேரம் அகற்றப்படாமல் மலை போல குவிந்து தேங்கி கிடப்பது உண்டு. இதனால் அப்பகுதியில் எப்பொழுதுமே ஒரு துர்நாற்றம் வீசி வரும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அப்பகுதியில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கும் விதமாக அங்கிருந்த குப்பை தொட்டிகளை திடீரென அகற்றினர்.

அங்கிருந்த குப்பைத் தொட்டியை அகற்றியதுடன் ஒரு அறிவிப்பு பலகையும் வைத்தனர். இங்கு யாரும் பொதுமக்கள் குப்பையை கொட்ட கூடாது என்றும் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் அப்பகுதியில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அறிவிப்பு பலகையில் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கெல்லாம் மேலாக ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த துப்புரவு பணியாளர் மூர்த்தி என்பவரை கடந்த ஐந்து நாட்களாக இரவும் பகலும் அங்கேயே காவலுக்கு அமர்த்தி வைத்திருக்கின்றனர்.

52 வயதாகும் மூர்த்தி கடந்த ஐந்து நாட்களாக அங்கேயே ஒரு பழைய கிழிந்து போன சோபாவில் திறந்தவெளியில் இரவும் பகலுமாக அமர்ந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது .

அப்போதும் யாரும் குப்பை போடாமல் காவல் காக்கும் மூர்த்திக்கு எந்த விதமான மழைக்கு ஒதுங்கும் வசதி கூட யாரும் செய்து தரவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

இதுகுறித்து துப்புரவுப் பணியாளர் மூர்த்தியிடம் பேசியபோது பொதுமக்கள் யாரும் இங்கு குப்பை கொட்ட கூடாது என்பதற்காக என்னை காவலுக்கு வைத்திருக்கிறார்கள்.

கொசுக்கடியிலும் ,சாக்கடை ஓரத்தில் இருப்பதால் கடுமையான துர்நாற்றத்திலும் 5 நாட்களுக்கு மேலாக இங்கேயே அமர்ந்திருப்பதாக கூறுகிறார். இன்று ஆறாவது நாளாக அதே இடத்தில் மூர்த்தி அமர்ந்து யாரும் குப்பைகள் கொட்டாமல் கண்காணித்து வருகிறார்.

உற்றார் உறவினர் யாருமில்லாத ஆதரவில்லாதவர்கள் கூட இரவில் தூங்க வேண்டும் என்பதற்காக அரசு ஆதரவற்றோர் காப்பகத்தை நடத்தி வருகிறது . ஒப்பந்த துப்புரவு பணியாளராக மாதம் 12,000 ரூபாய் சம்பளம் வாங்கி வரும் மூர்த்தியை கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக இரவும் பகலும் தொடர்ந்து பொதுமக்கள் குப்பை போடாமல் தடுப்பு காவல் பணியில் அமர்த்தப்பட்டு இருப்பது அப்பகுதியில் சாலையில் செல்லும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறிதளவும் மனிதாபிமானம் இல்லாமல் ஒரு மனிதனை கொடுமைப்படுத்தும் விஷயமாக இது இருக்கிறது என அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

சம்பள உயர்வு ,ஒப்பந்த பணியாளர்களின் பணியை நிரந்தரமாக்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் துப்புரவு பணியாளர் சங்கங்கள் இதுபோல நடக்கும் சம்பவங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Views: - 255

0

0