‘பழங்கால பொருட்கள் விற்பனைக்கு’ என பேஸ்புக்கில் விளம்பரம்: 3 பேர் கைது…ஆமை ஓடுகள் உள்ளிட்டவை பறிமுதல்..!!
Author: Aarthi Sivakumar8 August 2021, 3:25 pm
கன்னியா குமரி: அஞ்சுகிராமம் அருகே தடை செய்யப்பட்ட கலைபொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக 3 பேரிடம் விசாரணை நடத்தி அவர்களிடமிருந்து பல லட்சம் விலைமதிப்பற்ற பழங்கால பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த அழகப்பபுரம் ஜங்ஷனில் பழைய கால பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஆமை ஓடுகள், தடை செய்யப்பட்ட சங்கு பொருட்கள், மான் கொம்பு,யானைதந்தத்தில் செய்யப்பட்ட வளையல், சுவாமி விக்கிரகங்கள்,மான் தலைகள், பழைய கால தூப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு பழைய காலபொருட்கள் விற்பனைக்கு இருப்பதாக பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த விளம்பரத்தை பார்த்த மத்திய வன விலங்கு தடுப்பு போலீஸ் கடைஉரிமையாளரிடம் பழையகால பொருட்கள் விலைக்கு வேண்டும் என்றும் அதை நேரில் பார்க்க முடியுமா என்று கேட்டுள்ளனர்.
இதனையடுத்து பழங்கால பொருட்கள் குறித்த தகவல்கள்,விலை விபரங்கள் மற்றும் போட்டோக்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி கொடுத்தனர். இதனையடுத்து நேற்று காலை அழகப்பபுரத்தில் உள்ள கடை உரிமையாளரிடம் பொருட்களை நேரில் பார்த்தால் வாங்குவோம் என்று கூறி அவரிடம் நேரில் சென்று பொருட்களை பார்த்துள்ளனர்.
இதனையடுத்து கடைக்கு சென்று அங்கிருந்த பொருட்களை பார்வையிட்ட பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது தான் அவர்கள் அதிகாரிகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து கடையில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் நெல்லை மாவட்டம் ராஜகிருஷ்னபுரத்தை சேர்ந்த சங்கர்,ஆன்றோபோரஸ், கன்னியாகுமரி மாவட்டம் சாம்ராஜ் ஆகிய மூன்று பேரிடம் விசாரணை நடத்தி இந்த பொருட்கள் எங்கிருந்து வாங்கி எங்கு விற்பனை செய்யப்படுகிறது என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0
0