சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை.. உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்த பொன்முடி…!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 January 2024, 4:43 pm
Ponmudi - Updatenews360
Quick Share

சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை.. உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்த பொன்முடி…!!!

பொன்முடி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியின்போது உயர்கல்வி மற்றும் கனிம வள அமைச்சராக இருந்தார். அப்பொழுது ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீதிபதி சுந்தரமூர்த்தி இந்த வழக்கில் பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருவரையும் விடுதலை செய்தார். இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது. கடந்த நவம்பர் 27-ம் தேதி இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். பின்னர், நடந்த அந்த மனு மீதான விசாரணையில் பொன்முடியும், அவரது மனைவியும் சொத்து குவித்து வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியது.

இதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் நேரடியாகவோ, காணொலி மூலமாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

அன்று இருவரும் நேரில் ஆஜரான நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேலும், நீதிபதி 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைப்பதாகவும், 30 நாட்களுக்கு மேல் அவகாசம் தேவைப்பட்டால் 30 நாட்கள் நெருங்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவித்தார். இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தண்டனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Views: - 667

0

0