அரசு நிலத்திற்கு முறைகேடாக பட்டா : வட்டாட்சியர் உட்பட 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2021, 8:05 pm
Govt Officers Suspend - Updatenews360
Quick Share

தேனி : 90 ஏக்கர் அரசு நிலத்தை முறைகேடாக பட்டா மாறுதல் செய்த விவகாரத்தில் 2வட்டாட்சியர்கள் 2 துணை வட்டாட்சியர்கள் என் 4 பேர் பணியிடை நீக்கம் செய்து தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் 90 ஏக்கர் அரசு நிலங்களை முறைகேடாக ஆவணங்கள் தயாரித்து பட்டா மாறுதல் செய்ததாக எழுந்த புகாரில், மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவில் பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப் விசாரணை நடத்தினர்.

இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு காலத்தில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த ஆண்டுகளில் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய நில அளவையர் சக்திவேல் என்பவர் தனது மனைவி பெயரில் அரசு நிலத்தை பட்டா பெற்ற புகாரின் பேரில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டங்களில் பணிபுரிந்த 4பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதில் பெரியகுளம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், போடி சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியர் ரத்தினமாலா, பெரியகுளம் துணை வட்டாட்சியர் மோகன்ராம், ஆண்டிபட்டி துணை வட்டாட்சியர் சஞ்சீவ் காந்தி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விசாரணையில் அப்போது கோட்ட ஆட்சியர்களாக பணியாற்றியவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என மேல் விசாரணை நடைபெற்று வருகின்றது.

அரசு நிலத்தை முறைகேடாக பட்டா வழங்கப்பட்ட அரசு நிலத்தை முழுமையான விசாரணைக்கு பின் மீட்கும் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதுவரை அரசு நிலத்தை முறைகேடாக பட்டா வழங்கியதாக எழுந்த புகாரில் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலத்தில் பணியாற்றிய 5 அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.

Views: - 519

0

0