90 வயதான அரசமரம் வேறு இடத்தில் நடப்பட்டது : பூ தூவி வழியனுப்பிய பொதுமக்கள்!!

11 October 2020, 6:04 pm
Piple Tree- Updatenews360
Quick Share

திருப்பூர் : ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மறு நடவு செய்யப்பட்ட 90 வயதான அரசமரத்திற்கு ஊர் பொதுமக்கள் பூ தூவி மரத்தை வழி அனுப்பி வைத்தனர்.

திருப்பூர் – வாலிபாளையம் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 90 ஆண்டுகள் பழமையான அரசமரம் உள்ளது. இந்நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சமுதாய கூடம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. இதனை தொடர்ந்து அவ்விடத்தில் இருந்த பழமையான மரத்தை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது.

இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த இளங்கோ என்ற இயற்கை ஆர்வலர், திருப்பூர் – காளம்பாளையம் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாநகராட்சி இடத்தில் பழமை வாயந்த மரத்தை அகற்ற இருப்பதை அறிந்த அவர், கிரீன் & கிளின் அமைப்பின் மூலம் மாநகராட்சியில் பழமையான அரசமரத்தை மறு நடவு செய்ய அனுமதி பெற்றார். அனுமதி கிடைத்தை தொடர்ந்து, வாலிபாளையம் பகுதியிலிருந்து மரத்தை அகற்றும் பணி ஆரம்பித்தது.

90 வயது பழமையான, 80 அடிக்கும் மேல் உயரம் கொண்ட, 15 டன் எடை அளவுள்ள அரசமரம் இரண்டு ராட்சத கிரேன்கள் மூலம் வேருடன் பெயர்க்கப்பட்டு, ராட்சத டிரக் வாகனத்தில் ஏற்றபட்டது. முன்னதாக அரசமரத்தின் கிளைகள் வெட்டப்பட்டும் வேர்கள் காயமடையாதவாறும், சுற்றிலும் குழி தோண்டப்பட்டு, மரத்தின் காயமடைந்த பகுதிகள் சாணம் கொண்டு மெழுகப்பட்டது.

ராட்சத டிரக்கில் எடுத்து செல்லப்பட்ட அரசமரத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பூஜை செய்து மலர் தூவி வழி அனுப்பி வைத்தனர். டிரக் மூலம் காளம்பாளையம் பறவைகள் சரணாலயம் அமையவுள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட அரசமரம், அங்கு நம்மாழ்வார் முறைப்படி கரும்புசர்க்கரை, நாட்டுமாடு கோமயம், சாணம் ஆகியவை கலந்த அமிர்தகரைசல், வேப்ப புண்ணாக்கு கரைசல், தென்னைநார் ஆகியவை ஒரு வாரத்திற்கு முன்னதாக இடப்பட்டிருந்த குழியில் மரமானது கிரேன்களின் உதவியுடன் வெற்றிகரமாக மறுநடவு செய்யப்பட்டது.

மறுநடவு செய்யப்பட்ட பின், மீண்டும் அமிர்தகரைசல், வேப்ப புண்ணாக்கு கரைசல், தென்னைநார் ஆகியவை இடப்பட்டு மண் மூலம் மூடப்பட்டது. இந்நிகழ்வில் யுவராஜ் மெர்ச்செக்ஸ் இளங்கோ, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், கிரின் & கிளின் அமைப்பை சேர்ந்த செந்தில்குமார், வையம் ப்ராப்பர்டீஸ் விஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Views: - 55

0

0