10 வயது சிறுமிக்கு மது கொடுத்து புகை பிடிக்க வைத்த கொடுமை… வைரலான வீடியோ : தனிப்படை போலீசாரிடம் சிக்கிய 6 பேர்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2022, 7:54 pm
Girl Alcohol Video - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிலாளம். இந்த மலைப்பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் மது குடிப்பது போன்றும் பீடி பற்ற வைத்து புகைப்பது போன்றும் வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது .

இந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலரும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தான் சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்ததும் , பீடியை பற்ற வைத்து கொடுத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தேன்கனிக்கோட்டையில் உள்ள போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் அடிப்படையில் தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் சம்பூரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார் .

இந்த விசாரணையில் சிறுமிக்கு மது ஊற்றிக்கொடுத்த சம்பவத்தில் பெட்டமுகிலாளம் பகுதியைச் சேர்ந்த சங்கையா, ருத்திரப்பா, அழகப்பா, குமார், ரமேஷ், சிவராஜ் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஆறு பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அனைவரையும் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் தலைமறைவான நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Views: - 713

0

0