தமிழகத்தில் ‘லாக்டவுன்’ கிடையாது…ஆனால் கட்டுப்பாடுகள் இருக்கு: சுகாதாரத்துறை செயலர்..!!

Author: Aarthi Sivakumar
25 March 2021, 4:56 pm
3
Quick Share

சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது. பாதித்த பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் நேற்று 1,636 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8,71,440 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,746 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,86,90,431 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 12,630 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு, பொதுமுடக்கத்தில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்த மார்ச் தொடக்கத்தில் இருந்து மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கு காரணமாக தேர்தல் பிரசார கூட்டங்கள் என்று கூறப்பட்டாலும், பொதுமக்களின் மெத்தனமும் காரணமாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், பொதுமக்கள் முக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், இரவு நேர ஊடங்கு, சில பகுதிகளில் பகுதி நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்திலும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முழு ஊரடங்கு என்று யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும், அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, குறிப்பிட்ட தெரு, வீடு, பகுதிகளில் மட்டும், மினி ஊரடங்கை செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.

பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல், அலட்சியமாக இருப்பதால் தான் கொரோனா அதிகமாக பரவி வருவதாக குற்றம் சாட்டியவர், முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பதோடு, தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதிகரித்து வரும் கொரோனாவை எதிர்கொள்ள கூடுதல் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவை மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 73

0

0