அமைச்சர் பங்கேற்ற மாரத்தான் போட்டியில் மாணவர் மயங்கி விழுந்து பலி… மதுரையில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2023, 2:42 pm
Student Dead - Updatenews360
Quick Share

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உதிரம் 2023 என்ற தலைப்பில் குருதி கொடை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நான்காயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாரத்தான் போட்டியானது மதுரை மருத்துவக் கல்லூரியில் தொடங்கி 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி நான்காம் ஆண்டு பயிலக்கூடிய மாணவரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கலந்துகொண்டார். மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பின்பு மேடையின் அருகே உள்ள கழிவறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தினேஷ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவர் தினேஷின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் உடற் கூராய்விற்காக எடுத்துச் செல்லப்பட்டது. மாராத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப‌பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 228

0

0