என்ன சிம்ரன் இதெல்லாம்.. எல்லாமே நாடகமா? சொத்தை பறிப்பதாக கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பெண் வழக்கில் திடீர் திருப்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2022, 2:30 pm
Tirupur Woman Arrest - Updatenews360
Quick Share

தொழில் பார்ட்னர் என ஆசை வார்த்தை கூறி குடும்பத்தை விட்டுப் பிரித்து ஆவணங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டு சித்திரவதை செய்ததாக கூறி வாட்ஸ்பில் வைரல் வீடியோ வெளியிட்ட பல்லடத்தைச் சேர்ந்த அழகு நிலையம் நடத்தி வந்த பெண் உள்பட 3 பேர் கைது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிலோமினா (வயது 56). இவர் தனது இரண்டாவது கணவரான சந்திரகுமாருடன் வசித்து வருகிறார்.

பிலோமினாவின் முதல் கணவர் ராமச்சந்திரன் இறந்து சுமார் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. பிலோமினா ராமச்சந்திரன் தம்பதியினருக்கு பிரவீனா, தீபக், பாண்டியன், பிரியா ஆகிய இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

மூத்த மகளான பிரவீனா பல்லடம் மங்கலம் சாலையில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அழகு நிலையத்திற்கு வந்த பல்லடம் வேலப்ப கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவரது நட்பு கிடைத்துள்ளது.

பல்வேறு விஷயங்களை இருவரும் சந்தித்து அடிக்கடி பேசி வந்த நிலையில் தமிழ்ச்செல்வியின் கணவர் சிவக்குமார் என்பவரது தொடர்பு பிரவீனாவுக்கு கிடைத்துள்ளது.

பிரவீனா

இந்நிலையில் அழகு நிலையம் நடத்தி வந்த பிரவீனாவிற்கு சேகர் என்பவருடன் திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கும் நிலையில் தனது தாய் மற்றும் வளர்ப்பு தந்தை ஆகியோரிடம் சொல்லாமல் கொள்ளாமல் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திடீரென மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரவீனாவின் தாய் பிலோமினா பல்லடம் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகளைக் காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருமாறும் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் மாயமான பிரவீனாவை கடந்த சில நாட்களாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து அழகு நிலைய பெண் பிரவீனா பேசி கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோக்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதை அடுத்து பல்லடம் டிஎஸ்பி சௌமியா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பிரவீனாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈரோட்டில் பதுங்கி இருந்த பிரவீனாவை கண்டுபிடித்த போலீசார் பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தன்னை சிவக்குமார் என்பவர் தொழில் பார்ட்னர் என ஆசை வார்த்தை கூறி ஆவணங்கள் சிலவற்றில் கையெழுத்து பெற்றுக் கொண்டு சில கோடிகள் வங்கி கடன் பெற்று மோசடி செய்திருப்பதாகவும் தன்னை காப்பாற்றுங்கள் என்று வைரல் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அழகு நிலைய பெண் பிரவீனா பல்லடம் வேலப்ப கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும் சிவக்குமாரின் மேலாளர் என கூறப்படும் தமிழரசு ஆகிய மூவர் மீதும் கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த பைனான்சியர் குமரேசன் 48 என்பவர் பிரவீனா மற்றும் சிவக்குமார் பல்லடம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வைக்கப்பட்டிருந்தது குறித்து தகவல் அறிந்து பல்லடம் காவல் நிலையத்தில் தனக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை தொழில் பார்ட்னர் ஆக்குவதாக கூறி மேற்படி மூவரும் ஈரோடு கருங்கல் பாளையத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ 2 கோடி கடன் பெற்றுக் கொண்டு தனக்கு பணம் தராமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக பல்லடம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அழகு நிலையம் நடத்தி வந்த பிரவீனா அவரது தொழில் பார்ட்னர் சிவக்குமார் அவருடைய மேலாளர் திருப்பூரைச் சேர்ந்த தமிழரசு ஆகிய மூவர் மீதும் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து பிரவீனா மற்றும் சிவக்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மோசடி வழக்கில் பல்லடம் போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரவீனா சிவக்குமார் ஆகியோருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சிவக்குமாரை மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிரவீனாவை முதலுதவி சிகிச்சை முடிந்து போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் பண மோசடி வழக்கில் பிரவீனா, சிவக்குமார், தமிழரசு ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் பிரவீனாவை சிறையில் அடைத்துள்ள நிலையில் உடல்நலம் குறைவு காரணமாக சிவக்குமார் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் சிவகுமாரை சிறையில் அடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் தலைமறைவான தமிழரசு என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Views: - 814

0

0