புதுமணத் தம்பதி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திருப்பம் : ஒரே சமூகமாக இருந்தாலும்.. தந்தை பகீர் வாக்குமூலம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2023, 10:01 pm
Murder -Updatenews360
Quick Share

புதுமணத் தம்பதி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திருப்பம் : ஒரே சமூகமாக இருந்தாலும்.. தந்தை பகீர் வாக்குமூலம்!

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன் நகரில் வசித்து வரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களான வசந்தகுமார் மகன் மாரிச்செல்வம் (23), அவரது மனைவி கார்த்திகா (21) ஆகிய இருவரையும் நேற்று (02.11.2023) மாலை 6.30 மணியளவில் மேற்படி வசந்தகுமார் வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த முதற்கட்ட விசாரணையில் மாரிச்செல்வமும் (23) அதே பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா (21) ஆகிய இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளதும் இதையறிந்த மாரிச்செல்வம் வீட்டார் கார்த்திகாவின் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு பெண் கேட்டுள்ளதற்கு கார்த்திகாவின் தந்தை முதலில் மறுப்பு தெரிவித்துள்ளதும், அதன்பின்னர் கார்த்திகாவின் தந்தை ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், ஒரே பகுதியில் குடியிருந்து வருவதாலும் 6 மாதங்கள் கழித்து திருமணம் செய்து வைக்கலாம், கொஞ்சம் பொறுமையாக இரு என்று கார்த்திகாவிடம் கூறியிருந்த நிலையில் கார்த்திகா கடந்த 30.10.2023 அன்று தன் குடும்பத்தாருக்கு தெரிவிக்காமல் தன்னிச்சையாக மாப்பிள்ளை வீட்டாருடன் கோவில்பட்டிக்குச் சென்று அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து மேற்படி மாரிசெல்வத்தை திருமணம் செய்துள்ளதும், நாம் பெரிதாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்த நிலையில் இவ்வாறு ஓடிப்போய் திருமணம் செய்து தங்களை அசிங்கப்படுத்தி விட்டாளே என்று பெண் வீட்டாருக்கு ஏற்பட்ட திடீர் ஆத்திரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் இருவரும் திருமணத்திற்குப்பின் நேற்று முன் தினம் (01.11.2023) பெண்ணின் வீட்டருகில் திரு.வி.க நகரில் உள்ள பெண்ணின் தாய் மாமா வீட்டிற்குச் தம்பதி சகிதம் விருந்திற்கு சென்று, அங்கு தங்கி வந்து சுமூகமான சூழ்நிலையே இருந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு கொலை செய்த எதிரிகளை விரைந்து கைது செய்ய தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் அவர்களின் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திரு. சண்முகம், திரு.ராஜபிரபு, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. யாக்கோபு ஆகியோர் தலைமையிலான போலீசார் அடங்கிய 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து திரு.வி.க நகரைச் சேர்ந்த கொலையான கார்த்திகாவின் தந்தை 1) முத்துராமலிங்கம் (47), தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் 2) இசக்கிராஜா (23) தூத்துக்குடி சங்கர் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் 3) ராஜபாண்டி (27) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 4 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு சம்மந்தமாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 296

0

0