மாநில அரசால் முடியலைனா துணை ராணுவ உதவியோடு தேரை ஓட வைக்கவா? நீதிபதி காட்டமான கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2023, 8:58 pm
Temple -Updatenews360
Quick Share

மாநில அரசால் முடியலைனா துணை ராணுவ உதவியோடு தேரை ஓட வைக்கவா? நீதிபதி காட்டமான கேள்வி!!

சிவகங்கை மாவட்டம் கண்டதேவி பகுதியை சேர்ந்த மகா சிதம்பரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பிரசித்தி பெற்ற கண்டதேவி கோயில் ஆனி மாதத்தில் நடைபெறும் தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும்.

தற்போது இந்த கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் தற்போது வரை வெள்ளோட்டம் செய்யப்படாமல் உள்ளது. தேர் வெள்ளோட்டத்திற்காக ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் தேர் வெள்ளோட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பதால் நீதிபதி மிகவும் காட்டமாக சில கேள்விகளை முன்வைத்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர் தயாராக உள்ளதாகவும் ஆனால் பல பிரிவினர்களுக்கு இடையே உள்ள பிரச்சினையால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருப்பதாக குறிப்பிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் இன்னமும் பல பிரிவினருக்கு இடையே ஒற்றுமை ஏற்படவில்லை என்ற சூழல் வருத்தம் தருகிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள் அரசின் நடவடிக்கையில் ஒரு சதவீதம் கூட திருப்தி இல்லை.

மாநில அரசால் தேர் வெள்ளோட்டத்தை நடத்த முடியவில்லை என்றால் துணை ராணுவம் உதவியோடு தேரை ஓட வைக்கவா? அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும். பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்திவைக்கவா தேரை உருவாக்கினீர்கள் என கேள்வி எழுப்பினார். மேலும் வரும் 17 ஆம் தேதி தேர் வெள்ளோட்டத்தை நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Views: - 200

0

0