காவிரி ஆற்றில் 100 ஏக்கரில் மணல் குவாரி அமைக்க அதிமுக எதிர்ப்பு ; பாலம் எல்லாம் இடிந்து விழும் என எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
4 October 2023, 4:23 pm
Quick Share

கரூர் மாவட்டத்தில் நெரூர் மற்றும் அச்சமாபுரம் என இரண்டு இடங்களில் காவிரி ஆற்றில் புதிதாக மணல் குவாரி அமைக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சியினர் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு கிராமத்தில் 16.05 ஹெக்டேர் பரப்பளவில் மணல் குவாரி, மண்மங்கலம் அச்சமாபுரத்தில் 24.00 ஹெக்டேர் பரபப்பளவில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் இணைந்து டிஆர்ஓ கண்ணன் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் வாங்கல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சுமார் 200 பேர்கள் மட்டுமே அமரக்கூடிய இடத்தில், மக்கள், மாட்டுவண்டி தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் குவிந்ததால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சி, சமுக ஆர்வலர்கள், சாமானிய மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மாட்டு வண்டி தொழிலாளர்கள் உட்பட 700க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள வந்ததால் நிற்க கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டது.

புதிய மணல் குவாரிகளில் லாரிகளில் மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், மாட்டு வண்டியில் உள்ளுர் தேவைகளுக்கு மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினர். மாட்டு வண்டியில் மணல் எடுக்கிறோம் என கூறி விட்டு லாரிகளில் மணல் கொள்ளையடிப்பதற்கு பல்வேறு கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

45 ஆறுகள், ஆண்டு முழுக்க தண்ணீரோடு ஓடும் கேரளாவில் கடந்த 38 ஆண்டுகளாக மணல் குவாரிகள் எதுவும் இல்லை. ஒரு கைப்பிடி மணலை கூட ஆறுகளில் அள்ள விடாமல் அரசு இயற்கை வளத்தை கண் போல் பாதுகாத்து வருகிறது.

ஆனால் 33 ஆறுகள் மட்டுமே உள்ள தமிழகத்தில், அறிவியல் முறைப்படி, இயற்கை மீண்டும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் வகையில், ஆற்றில் மணலை அள்ளாமல் எந்த விதியும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டதால், 160 ஆண்டுகள் அள்ள வேண்டிய மணலின் அளவு, கடந்த 30 ஆண்டுகளில் ஆற்றின் அடிமட்டம் வரை அள்ளப்பட்டு விட்டது. ஆறுகள், ஆறு என்று சொல்லக்கூடிய அளவில் இல்லாமல் தனது இயல்பு நிலையை இழந்து விட்டது.

காவிரி ஆறு கருர் மாவட்டத்தில் உள்ள 140 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. மேலும், தென்மாவட்டங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இங்கு இருந்து தான் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.

இப்பகுதியில் மணல் எடுத்தால் 6 மாதத்தில் குடிக்க தண்ணீர் இருக்காது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தொழில்கள் அழிந்து விடும். காவிரி கரையேர பகுதியில் உள்ள மக்கள் கூட குடிநீருக்காக குடம் தூக்கிக் கொண்டு அலைய நேரிடும் என எதிர்ப்பை தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் பல எதிர்ப்புகளை மீறி ஒரு சிலர் ஆதரவும் தெரிவித்தனர்.

புதிய மணல் குவாரிகளை அமைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தொடரும் மணல் கொள்ளையால் பாலங்களின் பேஸ்மென்ட் லெவல் வெளியே தெரிவதாகவும், இந்த நிலையில் தொடர்ந்தால் பாலங்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Views: - 318

0

0