மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு : கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகள் 3 பேர் தகுதி

9 November 2020, 11:24 am
Neet Students - Updatenews360
Quick Share

கோவை : நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கிடு மூலம் கோவை மாநகராட்சி பள்ளியில் பயின்ற 3 மாணவியர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரிகளுடன் மாநகராட்சி முதன்மை கல்வி அலுவலர் வள்ளியம்மாள் தலைமையில் காணொளி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் அதிகளவில் நீட்தேர்வில் வெற்றி பெறுவதற்கு தமிழ்நாடு அரசு மூலமாக அந்தந்த பள்ளிகளில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் சதவிகிதம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகின்றது.

அதனடிப்படையில், கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட 16 மேல்நிலைப் பள்ளிகளில் உயிரியல் பிரிவில் பயிலும் 241 மாணவ, மாணவியர்களில் இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சேதா பாக்கியம், அம்மணியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஹேமலதா, ஆர்.எஸ்.புரம் (மேற்கு) மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தாரணி ஆகிய 3 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.

Views: - 32

0

0