மூன்றாவது கண்ணை மூடி மறைத்து கொள்ளை முயற்சி : ஸ்டிக்கர் ஒட்டிய கொள்ளையனை கைது செய்த போலீஸ்!!

Author: Udhayakumar Raman
20 October 2021, 9:48 pm
Quick Share

சென்னை: சிசிடிவி கேமிராவில் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து, ஏ.டி.எம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து திருட முயற்சி செய்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

சென்னை கொளத்தூர் ஸ்ரீநகர் காலனி சந்திப்பு பகுதியில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக நபரொருவர் ஏ.டி.எம் மையத்தில் இருப்பதை பார்த்து போலீஸ் வாகனத்தை ஏடிஎம் மையத்தில் முன் நிறுத்தினார். வாகனத்தை பார்த்த நபர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி அருகிலிருந்த தெருவுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். உடனடியாக இது குறித்து இன்ஸ்பெக்டர் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

நீண்ட இழுபறிக்கு பின் திருடனை கையும் களவுமாக பிடித்தனர். அவனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் கொளத்தூர் விநாயகபுரம் பால விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரிய வந்தது. மேலும் ஏ.டி.எம் மையத்தில் இருந்த கேமராவில் திருடன் அகப்பட்டு விடக்கூடாது என்பதற்காக திருடுவதற்கு முன் ஏ.டி.எம் மையத்தில் இருந்த கேமராவில் ஸ்டிக்கர் ஒட்டி அதனை மறைத்துள்ளார். அதன் பின்பு இரும்பு கடப்பாரையால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். அதற்குள் போலீசார் சென்று விடவே அங்கிருந்து தப்பித்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 183

0

0