சிசிடிவிக்கு ஸ்ப்ரே அடித்து ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி : இளைஞருக்கு வலை வீசிய போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2021, 4:21 pm
ATM Theft -Updatenews360
Quick Share

மதுரை : ஏடிஎம்மில் இயந்திரத்தை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளதாக தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றவுடன் அங்கிருந்து வந்த பொறியாளர் குழுவினர் ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்தனர்

அப்போது ஏடிஎம் இயந்திரம் சேதமடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்த பின் ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்

அதில் இளைஞர் ஒருவர் ஏடிஎம் மையத்தில் நுழைந்து ஸ்பிரே மூலம் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா மீது அடித்த பின் ஆயுதங்களை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தின் மேற்பகுதியை தனியாக எடுக்க முயற்சி செய்கிறார்.

நீண்ட நேரமாக போராடியும் மூடியை மட்டுமே திறக்க முடிந்ததால் விரக்தியடைந்த கொள்ளையர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது குறித்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரை தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு எஸ் எஸ் காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.

Views: - 207

0

0