சேவல் சண்டைக்கு தடை: வெளி மாநிலத்திற்கு சேவல்களை விற்கும் அவலம்…! சேவல் உரிமையாளர்கள் வேதனை…

Author: Udhayakumar Raman
14 January 2022, 10:32 pm
Quick Share

கரூர்: கரூரில் சேவல் சண்டைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் வெளி மாநிலத்திற்கு சேவல்களை விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சேவல் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி, தென்னிலை, அரவக்குறிச்சி, பள்ளபட்டி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்துடன் நாட்டு கோழி வளர்ப்பு என்பது பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. தன் சொந்த தேவைக்குப் போக மீதமுள்ள கோழிகளை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நேரிடையாக விற்பனை செய்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் சண்டை சேவல்களை வளர்த்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு சிலர் சேவல் சண்டைக்கு கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

சண்டை சேவல் வளர்ப்பு என்பது ஒரு கலை. சண்டை சேவல்கள் குஞ்சுகளாக இருக்கும் போதே அதை தேர்ந்தெடுத்து, அவற்றை சிறப்பு கவனிப்புடன் வளர்த்து எடுக்கின்றனர். பாதாம், முந்திரி, கடலை போன்ற சத்து மிகுந்த தானியங்களை உணவாக கொடுத்து, அவற்றிற்கு நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கொடுத்து சண்டைக்கு எடுத்து வருவர். கரூர் மாவட்டத்தில் பூலாம் வலசு, கோவிலூர், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சேவல் சண்டைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேவலின் காலில் கட்டப்பட்ட கத்தி வேடிக்கை பார்க்க வந்தவரின் வயிற்றில் குத்தியதால் அடுத்தடுத்து 2 உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டைக்கு மாவட்ட நிர்வாகம் தடை போட்டது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சேவல் சண்டைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சேவல் சண்டைகள் நடைபெற்றன. இந்த நிலையில் இந்த ஆண்டு கொரனோ காலகட்டம் என்பதால் இது போன்ற நிகழ்வுகளுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பூலாம்வலசு உள்ளிட்ட எப்பகுதிகளிலும் சேவல் சண்டை நடைபெறவில்லை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் நடைபெறும் இச்சேவல் சண்டையில் அண்டை மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சேவல்களை கொண்டு வந்து கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டையில் பங்கேற்பர். இவற்றை வேடிக்கை பார்க்க 5 நாட்களில் ஆயிரக் கணக்கானோர் வந்து செல்வர்.

ஆனால், இந்த ஆண்டு சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டதால் சண்டை சேவல் வளர்ப்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் வளர்க்கப்படும் சண்டை சேவல்கள் ரயில்கள் மூலம் ஆந்திராவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் சண்டை சேவல்கள் விலைக்கு வாங்கப்பட்டு அவை அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டது. அவற்றை சென்னையில் பெறும் இடைத்தரகர்கள் அவற்றை ஆந்திரா மாநிலத்திற்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து இருப்பதன் காரணமாக கரூர் ரயில் நிலையத்தில் இருந்து இந்த வாரத்தில் இது போன்று பல முறை சண்டை சேவல்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

Views: - 198

0

0