உப்பாறு மற்றும் நல்லதங்காள் அணைக்கு நிரந்தர தண்ணீர் கிடைக்க நடவடிக்கை : பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதி

26 January 2021, 8:07 pm
bjp nagaraj - updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் உப்பாறு அணை, நல்லதங்காள் அணை வட்டமலை கரை அணைகளுக்கு நிரந்தரமாக தண்ணீர் கிடைக்க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிப்பதாக பாஜக விவசாய அணியின் மாநில தலைவர் ஜிகே நாகராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது உப்பாறு அணை. 6 ஆயிரத்து 60 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் மூலம் பாசன வசதி அளித்து வந்த உப்பாறு அணை, கடந்த 15 ஆண்டுகளாக போதுமான தண்ணீர் திறந்து விடப்பட்டதால், வறண்ட பாலைவனம் ஆகி காட்சியளித்து வந்தது.

இந்நிலையில், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பல்வேறு விவசாய சங்கங்கள், விவசாயிகள் தொடர் போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இந்நிலையில், அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து அணைக்கு வந்து சேர்ந்த நிலையில், பரம்பிக்குளம் ஆழியாறு பிரதான கால்வாயில் திறந்துவிடப்பட்ட உபரி நீரும் உப்பாறு அணையுடன் வந்து சங்கமித்து, தற்போது 11 அடி தண்ணீரை உப்பாறு அணை தேக்கிவைத்து உள்ளது.

வறண்டு கிடந்த உப்பாறு அணைக்கு வந்து சேர்ந்த தண்ணீரால் உப்பாறு பாசன பகுதி கிராமங்கள் பகுதி விவசாயிகள் பயனடைவார்கள். இதனை முன்னிட்டு தாராபுரம் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் சார்பு அமைப்பான தமிழக பாஜக விவசாய அணியின் மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் தலைமையில் உப்பாறு அணைக்கு வந்த பாஜகவினர், அமைப்பின் மாவட்டத் தலைவர் விவேகானந்தன் முன்னிலையில் உப்பாறு அணைக்கு வந்த தண்ணீரை வரவேற்று, வருண பகவானுக்கும், தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அணை நீருக்கு மலர்தூவி வணங்கி வரவேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜிகே நாகராஜ் பேசியதாவது :- பாஜக விவசாய அணி சார்பில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி ஒரு கவன ஈர்ப்பு பேரணி நடத்தி, உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தினோம். அந்த வகையில், இயற்கை தந்த வரத்துடன் தமிழக முதலமைச்சரின் ஏற்பாட்டின்படி, 11 அடி தண்ணீர் உப்பாறு அணைக்கு வந்து சேர்ந்துள்ளது. அனைத்து வந்து சேர்ந்துள்ள இந்த தண்ணீர் போதுமானதாக இருக்காது. இந்த அணை நிரம்பி வழிய வேண்டும். அதற்கு ஏற்றபடி மேலும் தண்ணீரை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கின்றோம்.

அதுமட்டுமின்றி பாஜக சார்பில் தாராபுரம் பகுதியில் இருக்கிற உப்பாறு, வட்டமலை கரை, நல்லதங்காள் அணை, இதையெல்லாம் நிரம்பும் வரையில் நிரந்தர தீர்வாக தண்ணீரைக் கொண்டு வர ஏற்பாடு செய்யக்கோரி எங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியை இடம்பெறச் செய்கிறோம். தற்போது விவசாயிகளுக்கும் மிகப்பெரிய ஒரு மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தண்ணீர் மட்டுமே. யாரும் தண்ணீரை திருடி வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துவதில்லை. அதுக்கு தான் பயன்படுகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பாஜக கருதுகிறது.

எனவே இதற்கான மூல ஆதாரங்களை எல்லாம் வைத்து இப்பகுதியிலுள்ள மூன்று அறைகளுக்கும் நிரந்தரமாக தண்ணீரை வழங்க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்க உள்ளோம். இது குறித்த தீர்வினை மேற்கொள்ள இந்த உப்பாறு அணைக்கு நாங்கள் வந்திருக்கிறோம். அதுமட்டுமின்றி தண்ணீர் இல்லாத இந்த அணை தண்ணீரால் நிரம்பி உள்ளது அதற்கு நன்றி செலுத்தும் வகையிலும் விவசாயிகளின் பிரச்சினைக்கு நல்ல ஒரு தீர்வு காணவும், தேர்தல் அறிக்கையில் இப்பிரச்சனையை கொண்டு வருகிறோம். இதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம். தமிழ்நாட்டில் எங்கள் ஆட்சி அமைந்து விட்டால் மட்டும் போதும் தமிழ்நாட்டை தண்ணீரால் நிரப்பி விடுவோம். இதற்காகத்தான் காத்திருக்கிறோம், என்றார்

தொடர்ந்து தாராபுரம் நகருக்கு வருகை தந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்தில் அவரது பேச்சுக்கு பதிலளித்து பேசிய திரு .ஜி .கே. நாகராஜ் மேலும் கூறியதாவது :- ராகுல் காந்தி தொடர்ந்து சரியான மெச்சூரிட்டி இல்லாமல் பேசி வருகிறார். உதாரணத்திற்கு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடியை கட்டியணைத்த சம்பவங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. இதற்கு முன் ரபேல் ஊழல் என்று கூறி வந்தார். அதுவும் ஒன்றும் இல்லை என்றாகிவிட்டது. காங்கிரஸ் செய்த ஊழல் அதைக் கையில் எடுத்தால் பல பக்கங்கள் என நீளும் அந்த அளவுக்கு காங்கிரஸ் செய்துள்ளது.

கடந்த 60 ஆண்டு காலமாக கூட்டணியின் ஆதரவுடன் இந்தியாவை ஆட்சி செய்துள்ளனர். இதுவரை எந்தப் பிரச்சனைக்கும் எந்த தீர்வும் கொடுக்கவில்லை. இப்போது உள்ள வேளாண் சட்டங்கள் ஏற்கனவே அவர்கள் கொண்டு வந்ததுதான். இதேபோல், ஜிஎஸ்டி வரி விதிப்பு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்ததுதான். பல திட்டங்களை அவர்கள் செய்ததெல்லாம், மக்களை ஏமாற்றுவதற்காக அவர்களது உண்மையான நோக்கம். இந்தியாவை வளப்படுத்துவது அல்ல. இந்தியாவை பிடித்து ஆள வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். ஜிஎஸ்டி வரி அதன் வசூல் உயர்ந்திருக்கிறது என்றாலே தொழில் நல்ல முறையில் நடக்கிறது என்றுதானே அர்த்தம்.

அதுமட்டுமின்றி சீன இந்திய எல்லைப் பகுதியில் இவர்கள் ஆட்சியில் எவ்வளவு இடத்தை விட்டுக் கொடுத்தார்கள். எப்படி சீனா இவர்களை தாக்கியதில் புறமுதுகிட்டு வந்தார்கள் என்ற வரலாறு அனைவருக்கும் தெரியும். இன்று சீனா இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது. அது மக்களுக்கு தெரியும். ஒரு தீவிரவாதி இந்தியாவுக்குள் கால் வைத்தால், அவன் பிணமாகத்தான் செல்ல வேண்டும் என்பதும் தெரியும். இந்த மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பொய்யான தவறான தகவல்களை கருத்துக்களை ராகுல் காந்தி அவர்கள் பிரச்சாரத்தில் செய்து வருகிறார். அவரால் வேறு எதுவும் செய்ய முடியாது.

காங்கிரசின் காலம் முடிந்துவிட்டது. அவரது பொய் பிரச்சாரம் இனி இங்கு எடுபடாது. நல்ல ஒரு ஆட்சியை பாரத பிரதமர் அவர்கள் மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இன்றைய பொருளாதார சீர்கேட்டுக்கு முக்கிய காரணமே காங்கிரஸ் கட்சிதான். 20 லட்சம் கோடிக்கும் மேலான பணத்தை காங்கிரஸ் பெற்றுக்கொண்டு சைனாவின் சந்தையை இங்கு திறந்துவிட்டார்கள். இன்று மோடி அவர்கள் அதைத் தடுத்து நிறுத்தி இருக்கிறார். சுயசார்பு திட்டத்தின் மூலமாக அதைச் செய்திருக்கிறார். அதனால்தான் இன்று ஜிஎஸ்டி வரி உயர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாட்டுக்கு வேண்டியதை பிரதமர் மோடி அவர்கள் வேண்டிய காலத்தில் செய்து கொண்டுதான் இருக்கிறார், இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 0

0

0