வயலில் இறங்கி நீரில் மூழ்கிய பயிர்களை ஆய்வு செய்த அண்ணாமலை… வீடு வீடாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்!!

Author: Babu Lakshmanan
16 November 2022, 7:22 pm
Quick Share

மயிலாடுதுறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார்.

122 ஆண்டுகள் இல்லாத அளவில் மயிலாடுதுறையில் கனமழை பெய்துள்ளது. இதனால், 100க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், குடியிருப்பு பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. எனவே, மீட்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களையும், விவசாயிகளையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், நிவாரணப் பொருட்களையும் வழங்கினர்.

அந்த வகையில், தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மயிலாடுதுறை மாவட்டம் ஆச்சாம்பள்ளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும், வீடுவீடாகச் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மத்திய அரசின் தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ் நிதி அனைத்தும் வந்து சேர்ந்து விட்டதா..? என்று பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணம் போதவில்லை என்றும், தமிழக அரசை வலியுறுத்தி கூடுதல் தொகையை பெற்றுத் தருமாறு பொதுமக்கள் அண்ணாமலையிடம் முறையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டார். அப்போது, வயலில் முட்டியளவு தண்ணீர் தேங்கி நின்ற நிலையில், அதில் இறங்கிச் சென்று பாதிக்கப்பட்ட பயிர்களை கையில் எடுத்து ஆய்வு செய்தார். பின்னர், விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், உரிய நிவாரணத்தை பெற்றுத் தருவதாக அவர் உறுதியளித்தார்.

Views: - 369

0

0