தமிழக ஆன்மீக மரபுக்கு எப்போதும் எதிர்வினை.. பேசாம மத்திய அரசுகிட்ட விட்டுடுங்க ; CM ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
18 April 2023, 12:53 pm
Quick Share

தமிழக ஆன்மிக மரபை அறிந்த தொல்லியல் அறிஞர்களை கொண்டு ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், இல்லையெனில் மத்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஏப்ரல் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சீர்காழி அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில் சீரமைப்புப் பணியின்போது, பூமிக்கடியில் இருந்து பஞ்சலோக சுவாமி சிலைகளும், செப்பேடுகளும் கிடைத்துள்ளன. இந்த செப்பேடுகளில் நம் தாய்த்தமிழ் மொழியின் பொக்கிஷங்களில் ஒன்றான, தேவாரப் பதிகங்கள் எழுதப்பட்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மிகப் பழமையான தருமை ஆதீனத்தின் குருமகா சன்னிதானம் அவர்களும், தமிழறிஞர்கள், தொல்லியல் அறிஞர்கள் பலரும், “தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் சான்று, பெரும் ஆவணமாகக் கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார். சைவத்தின் மிக பிரம்மாண்ட எழுச்சிக்கு அடித்தளமிட்ட அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவர், தீந்தமிழில் பாடிய பதிகங்கள் தான், திருமுறைகள் என்றும், தேவாரம் என்றும் அழைக்கப்பட்டன. இதன் காலம் கி.பி 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு. தேவாரப் பதிகங்கள் இதுவரை ஓலைச்சுவடிகளில் தான் கிடைத்துள்ளன. சில இடங்களில் கல்வெட்டுகளிலும் காணக் கிடைக்கின்றன. ஆனால், முதல்முறையாக செப்பேடுகளில் தேவாரப் பதிகங்கள் கிடைக்கப்பட்டுள்ளது தமிழக வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதுபோல கடந்த வாரம், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி பாசுரங்களுக்கான உரை அடங்கிய ஓலைச்சுவடிகள், தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் உள்ள அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சீர்காழியில் கிடைத்துள்ள சுவாமி சிலைகள், செப்பேடுகள் மற்றும் ஆழ்வார்திருநகரியில் கிடைத்துள்ள ஓலைச்சுவடிகளை தீவிரமாக ஆய்வு செய்து அதில் எழுதப்பட்டிருப்பவற்றையும், அதன் காலத்தையும் துல்லியமாக கண்டறிய வேண்டும். அதன் மூலம் தமிழக வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடியும்.

தமிழகம் முழுவதும் உள்ள பல நூறு ஆண்டுகள், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஹிந்து கோயில்கள் தான் தமிழகத்தின் அடையாளம். தமிழகம் ஆன்மிக மண் என்பதற்கான சான்று. தற்போதுள்ள திமுக அரசுக்கு, ஹிந்து மதத்தின் மீதும் கோயில்கள் மீதும், அதன் கலாசார பெருமிதத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் தமிழக ஆன்மிக மரபுக்கு எதிராக பேசி வருகின்றனர். அதுதான் தங்களது கொள்கை என்றும் பறை சாற்றி வருகின்றனர். திராவிடம் என்ற நிலப்பரப்பை, ‘இனம்’ என்றும், தமிழர்களுக்கு மதம் இல்லை என்றும் நாத்திகவாதம் பேசி வருகின்றார்.

எனவே தமிழக ஆன்மிக மரபின் மீது நம்பிக்கை கொண்ட பெரியோர்களுக்கும், ஆன்மிக தலைவர்களுக்கும், இந்த தொல்லியல் சான்றுகளை திமுக அரசு எப்படி கையாளப்போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தலையிட்டு தொல்லியல் துறையில் நீண்ட அனுபவமும், தமிழக ஆன்மிக மரபை நன்கறிந்த தொல்லியல் அறிஞர்களை கொண்டு ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இல்லையெனில் இதனை, மத்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என வானதி சீனிவாசன். கூறியுள்ளார்.

Views: - 208

0

0