தொடரும் மோதல்… அதிமுக – பாஜக கூட்டணி முறிவா..? வெளிப்படையாக சொன்ன நயினார் நாகேந்திரன்..!!
Author: Babu Lakshmanan15 ஜூன் 2023, 2:05 மணி
செந்தில் பாலாஜி மீதான அமலாக்கதுறை நடவடிக்கைகள் பழிவாங்கும் நடவடிக்கையல்ல என்று பாஜக தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் பாஜக தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- அமலாக்கத்துறை எடுத்துள்ள நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு. உச்சநீதிமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு எச்சரிக்கை கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், நீதிமன்றம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்ததை அடுத்து தான் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
ஏற்கனவே, வருமான வரித்துறை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் சோதனை செய்யப்பட்ட பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிமுக ஆட்சி நடக்கும் பொழுது வருமானவரித்துறை அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் சோதனை செய்தபோது, என்ன சொன்னார்கள். அப்போது சொன்னது வேறு. இப்போது சொல்வது வேறு. ஒரே நாக்கு இரண்டு பதில்களை தருகிறது. தற்போதைய தமிழக முதலமைச்சரே செந்தில் பாலாஜி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அமித்ஷா வந்ததற்கும், தற்போது உள்ள நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். அதிமுக, பாஜக கட்சி இடையே பேச்சளவில் கருத்து வேறுபாடு வந்துள்ளது. கூட்டணிக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. பத்திரிகையாளர்களின் கேள்விக்கு மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக எந்த கருத்துக்களையும் அவர் தெரிவிக்கவில்லை.
அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் வேண்டாம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை 3 பேரும் சேர்ந்து தான் முடிவு எடுப்பார்கள். அதிமுக பொதுச் செயலாளரும், பிரதமர், அமித்ஷா, ஜே.பி நட்டா ஆகியோர் கூட்டாக சேர்ந்து தான் முடிவெடுக்க முடியும். எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்று தான் வேலை செய்கிறார்கள். இறுதி முடிவு கூட்டணி தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள்.
முன்பு தமிழர் ஒருவர் பிரதமராக வரும் வாய்ப்பு இருந்து எப்படி தவறி போனது என்பதை அனைவருக்கும் தெரியும். அகில இந்திய அளவில் 2024 தேர்தலில் வென்று பிரதமராக நரேந்திர மோடி வருவார். அதன் பின்பு வரும் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த யார் வந்தாலும் மிகுந்த மகிழ்ச்சி. தலைமை அனுமதித்தால் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவேன்.
அதிமுக- பாஜக கூட்டணி என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று. எந்த நேரத்தில் யார் வேட்பாளராக அறிவித்தாலும் ஒருங்கிணைந்து வெற்றிக்கான பணிகளை செய்வோம். நாள்தோறும் கட்சினர் ஒவ்வொருவர் சொல்லும் வார்த்தையை வைத்து கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எடுக்கக் கூடாது, என தெரிவித்தார்.
0
0