‘ரூ.25 ஆயிரம் கொடு முடிச்சு தரேன்’… ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை… கையும் களவுமாக சிக்கிய வட்டாட்சியர்!!

Author: Babu Lakshmanan
27 December 2023, 8:48 pm
Quick Share

திருச்சி அருகே ரூபாய் 25000 லஞ்சம் வாங்கிய மண்டல வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் கோபால் என்பவரது மகன் கிருஷ்ணன் (40). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் தனது தாயார் பெயரில் முசிறியில் சொந்தமாக ஒரு வீடும், ஒரு காலியிடமும் உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் இதுவரை வருவாய் துறையில் இருந்து பட்டா வழங்கப்படவில்லை.

எனவே, கிருஷ்ணன் தாயார் பெயரில் மேற்படி 2 இடத்திற்கும் பட்டா பெறுவதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் மனு செய்துள்ளார். தனது பட்டா சம்பந்தமாக கிருஷ்ணனுக்கு எந்த தகவலும் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வரவில்லை.

பல மாதங்கள் கடந்து விட்டதால் கிருஷ்ணன் முசிறி கிழக்கு விஏஓ அலுவலகம் சென்று கிராம நிர்வாக அலுவலர் விஜயசேகரை சந்தித்து தனது மனுவின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு விஜயசேகர் உங்க இடத்தை மண்டல துணை வட்டாட்சியர் வந்து பார்வையிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பின் நவம்பர் மாதத்தில் விஏஓ விஜயசேகர் முசிறி மண்டல துணை வட்டாட்சியர் தங்கவேலை அழைத்துக் கொண்டு கிருஷ்ணனின் இடத்தை பார்வையிட்டு விட்டு தாலுகா அலுவலகம் வருமாறு கூறிச் சென்றுள்ளனர். அதன் பேரில் கிருஷ்ணன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாலை முசிறி வட்டாட்சியர் அலுவலகம் சென்று மண்டல வட்டாட்சியர் தங்கவேலை சந்தித்து தனது பட்டா குறித்து கேட்டுள்ளார்.

அப்போது மண்டல வட்டாட்சியர் தங்கவேல் கிருஷ்ணனிடம் உங்களுக்கு இரண்டு இடத்திற்கும் பட்டா பெற்று தருவது என்றால், ஒரு பட்டாவுக்கு 15,000 வீதம் இரண்டு பட்டாவுக்கு முப்பதாயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டுமாறு கேட்டுள்ளார். கிருஷ்ணன் தொகையை குறைத்து கூறுமாறு மண்டல வட்டாட்சியரிடம் கேட்டதன் பேரில், மண்டல துணைவட்டாட்சியர் 5000 குறைத்துக் கொண்டு ரூ.25000 கொடுத்தால் தான் பட்டா பெற்று தர முடியும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு சென்று அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணனிடம் ரூ.25 ஆயிரம் ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து அனுப்பினார்.

இதையடுத்து, மண்டல துணை வட்டாட்சியர் தங்கவேல் லஞ்சப்பணம் ரூ25000ஐ கிருஷ்ணனிடமிருந்து பெற்றபோது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் மண்டல துணை வட்டாட்சியர் தங்கவேலை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 324

0

0