ஜாமீன் கொடுக்க முடியாது.. அமலாக்கத்துறை விசாரணையை ஆரம்பிக்கலாம் : நீதிபதி போட்ட அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2023, 7:57 pm
Senthil - Updatenews360
Quick Share

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மற்றும் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்ககோரிய மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று, அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தது. இந்த மனு நீதிபதி அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவமனையில் இருந்து காணொலி வாயிலாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் இருதரப்பு வாதங்களும் நடைபெற்ற நிலையில், இரு மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், செந்தில்பாலாஜியை வரும் 23ம் தேதி வரை, அதாவது 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க சென்னை முதன்மை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் மருத்துவமனையிலேயே அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு, செந்தில் பாலாஜியை மீண்டும் ஜூன் 23 மாலை 3 மணிக்கு காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கதுறைக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதே சமயம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என அமலாகத்துறை தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது.

Views: - 332

0

0